நாட்டின் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்ய அணுசக்தி அவசியம் என்பதால், இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டிய நிலையில் இந்த அரசு உள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
டெல்லியில் 1500 மெகாவாட் பிரகதி பகுதி-3 எரிவாயு சக்தி திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற பிரதமர் கூறியதாவது:
சில வளங்களுக்கான ஆதாரம் தற்போது மிகவும் குறைந்து வருவதால், நாட்டின் எதிர்கால தேவை குறித்து மத்திய அரசு சிந்திக்க வேண்டியுள்ளது. எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை தற்போது மேற்கொள்ளாவிட்டால் இந்த அரசு தனது கடமையை செய்ய தவறியதாகிவிடும்.
நாட்டின் எரிசக்தி தேவைக்கு ஓரிரு வளங்களை மட்டுமே நம்பி இருக்க முடியாது. அதற்கு மாற்றாக வேறு வளங்களை மேம்படுத்த வேண்டியது அவசியம். நகரமயமாதலால் வளங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மின்சாரத்திற்கு அதிக தேவை உள்ளது. அதற்கு அணுசக்தியை போன்று வேறு சக்தியை பயன்படுத்தவேண்டியுள்ளது.
இந்தியப் பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 8-9 விழுக்காடு அளவுக்கு உயர்ந்து வருகிறது. அதேபோல் நகர வளர்ச்சி, அதிகரிக்கும் ஆடம்பரம் ஆகியவற்றுக்கு போதுமான மின்சாரத்தை விநியோகிக்க முடியாத அளவுக்கு அதற்கான வளம் உள்ளது.
எனவே, சுற்றுச்சூழக்கு மாசு ஏற்படாமல், வளங்களை விரிவுபடுத்தும் வகையில் அணுசக்தி வளம் மேம்படுத்தப்படும். அதற்காக இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும், என்று பிரதமர் கூறினார்.
அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு இடதுசாரிகளின் எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மீண்டும் இவ்வாறு தெரிவித்திருப்பதும், இதுசம்பந்தமாக அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி அதிபர் புஷ்சை இன்று சந்தித்துள்ளதும் அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.