விலங்குகளால் ஏற்படும் உயிரிழப்பிற்கு நஷ்டஈடு ரூ.10 லட்சம்!

புதன், 19 மார்ச் 2008 (20:06 IST)
வன விலங்குகளின் தாக்குதலில் பலியாவர்களின் குடும்பத்திற்கான நஷ்ட ஈடு ரூ.10 லட்சமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மக்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய வனத்துறை, சுற்றுச்சூழல் இணை அமைச்சர் ரகுபதி பதிலளிக்கையில், 'மக்கள் தொகை அதிகரிப்பால் குறிப்பாக யானைகள், சிறுத்தைகளுக்கான வாழ்விடங்களகுறைக்கப்பட்டு வருகின்றன. இதனால், மனித-விலங்குகளிடையே மோதல் உருவாகிறது. தனியார் நிலங்களை நேரடியாக விலைக்கு வாங்கி விலங்குகளுக்கான வழித்தடம் அமைக்கும் திட்டம் ஏதும் அமைச்சகத்திடம் இல்லை.

யானைகள் வழித்தடம் அமைக்க கேரள அரசு பரிந்துரைகளை வழங்கியுள்ளது. பிரமகிரி- திருநெல்வேலி, பெரியார், பக்ரந்தாலம், பள்ளிவயல்-தத்தூர் ஆகிய பகுதிகளில் பாரம்பரிய வழித்தடங்கள் அமைக்க ரூ.7.89 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நிதிப்பற்றாக்குறை காரணமாக இந்த பரிந்துரைக்கு நிதி ஒதுக்க முடியவில்லை.

திட்ட ஆணையத்திடம் இதற்காக நிதி கேட்கப்படும். எனினும், விலங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் குடும்பத்திற்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது' என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்