விமான கடத்தல்: பாக் ஒத்துழைக்கவில்லை- பிரணாப்!

புதன், 19 மார்ச் 2008 (19:28 IST)
காந்தஹார் விமானக் கடத்தலில் தொடர்புடைய தீவிரவாதிகளை ஒப்படைப்பதில் பாகிஸ்தான் ஒத்துழைக்கவில்லை என்று மக்களவையில் மத்திய அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி குற்றம்சாட்டினார்.

கடந்த 1999-ம் ஆண்டில் டெல்லியில் இருந்து காட்மாண்டிற்கு 157 பயணிகளுடன் புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை 5 பேர் கொண்ட தீவிரவாத கும்பல் ஆப்கானிஸ்தானில் உள்ள காந்தஹாருக்கு கடத்திச் சென்றது. மூன்று தீவிரவாதிகளை இந்திய அரசு விடுதலை செய்த பிறகே, பயணிகளை விடுவித்த தீவிரவாதிகள் பாகிஸ்தானிற்குத் தப்பினர்.

விடுதலை செய்யப்பட்ட மூன்று முக்கிய தீவிரவாதிகளில் ஜெய்ஷ் -ஈ-முகமது தலைவர் மௌலானா மசூத் அசாரும் ஒருவன். இந்த வழக்கில் மூன்று தீவிரவாதிகளுக்கு பாட்டியாலா சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மீதமுள்ள குற்றவாளிகளை பிடிப்பதில் சிக்கல் நிலவி வருகிறது.

இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் பிரணாப் அளித்த பதிலில், 'தீவிரவாதத்திற்கு எதிரான கூட்டு நடவடிக்கை, தீவிரவாதம் மீதான செயலர் அளவிலான பேச்சுவார்த்தை ஆகிய பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தானுடன் நடந்துவருகிறது. கந்தஹார் விமானக் கடத்தல் விவகாரத்தில் பாகிஸ்தான் உரிய ஒத்துழைப்பு அளிப்பதில்லை' என்று தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்