புதிதாக 50 உயிரி தொழில்நுட்ப மையங்கள்: கபில் சிபல்!
செவ்வாய், 18 மார்ச் 2008 (17:41 IST)
வேகமாக வளர்ந்துவரும் உயிரி தொழில்நுட்பத்துறையை மேலும் வளமிக்க துறையாக்க, பல்கலைக்கழகங்களில் புதிதாக 50 உயிரி தொழில்நுட்ப மையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறை அமைச்சர் கபில் சிபல் கூறினார்.
மக்களவையில் இன்று உயிரி தொழில்நுட்பத்துறையின் வருவாய் குறித்த கேள்விக்கு அமைச்சர் கபில் சிபில் பதிலளிக்கையில், 'இத்துறை வேகமாகவும், உறுதியாகவும் வளர்ச்சி பெற்று வருகிறது. கடந்த 2004-05 ஆம் ஆண்டில் ரூ.4 ஆயிரத்து 745 கோடியாக இருந்த இத்துறையின் வருவாய் 2006-07ல் ரூ.8 ஆயிரத்து 541 கோடியாக அதிகரித்துள்ளது. இத்துறைக்கு 9-வது ஐந்தாண்டு திட்டத்தில் ரூ.621 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் ரூ.6 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது" என்றார்.
"இந்தியாவை சர்வதேச உயிரி தொழில்நுட்ப மையமாக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்துவருகிறது. இத்துறைக்கு அயல்நாடுகளின் நேரடி முதலீட்டை 100 விழுக்காடு அனுமதிக்கவும், உயிரி தொழில்நுட்ப பூங்கா, உயிரி வேளாண்மை மையங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. சர்வதேச தரத்தில் இத்துறையை உயர்த்துவதற்காக நட்சத்திரக் கல்லூரிகளுக்கான விதிமுறைகளைத் தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் அவர் கூறினார்.
மேலும், உயிரி தொழில்நுட்பத் தொழிற்சாலைகளை ஊக்குவிக்க சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ஒதுக்கப்பட்டுள்ள 10 ஹெக்டர் பரப்பளவு நிலம் 100 ஹெக்டராக அதிகரிக்கப்படுகிறது என்று கபில் சிபல் தெரிவித்தார்.