சரப்ஜித் சிங்குக்கு கருணை காட்ட வேண்டும்: மத்திய அரசு!
செவ்வாய், 18 மார்ச் 2008 (17:04 IST)
இந்தியரான சரப்ஜித் சிங்கிற்கு மனிதாபிமான அடிப்படையில் கருணை வழங்கி அவரை தூக்கு தண்டனையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பாகிஸ்தானிற்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
சரப்ஜித் சிங்குக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனை தொடர்பாக பத்திரிக்கையில் வெளியாகி உள்ள செய்திகள் தொடர்பாக மக்களவையில் இன்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி அளித்த அறிக்கையில், இது தொடர்பாக பாகிஸ்தான் அரசிடமிருந்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வரவில்லை என்றும், விவரங்களை எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
"பத்திரிக்கையில் வெளியாகி உள்ள தகவல்படி கடந்த 1990 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடத்தப்பட்ட 4 வெடிகுண்டுத் தாக்குதல் தொடர்பான வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்தியரான சரப்ஜித் சிங், ஏப்ரல் 1ஆம் தேதி லாகூர் சிறையில் தூக்கிலிடப்பட உள்ளதாகக் கூறிய பிரணாப் முகர்ஜி, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம், சரப்ஜித் சிங்குக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான தேதி அறிவிக்கப்பட்டது தொடர்பான விவரங்களை கேட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்தியா, பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இரு நாட்டு கைதிகளின் நிலையை மேம்படுத்தும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதனடிப்படையில் சரப்ஜித் சிங் விவகாரத்திலும், மனிதாபிமானத்துடன் கருணை காட்ட வேண்டும் என்று பாகிஸ்தான் அரசிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளதாகவும் பிரணாப் கூறினார்.