பல்கலை.யில் புரட்சிகரமான மாற்றம் அவசியம்: பிரதமர்!
சனி, 15 மார்ச் 2008 (20:17 IST)
உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்த பல்கலைக்கழங்களில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
வாரணாசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் 90-வது பட்டமளிப்பு விழா இன்று நடந்தது. அதில் பங்கேற்ற பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், 'சுதந்திரத்திற்கு பிறகு, இந்தியா உறுதியான உயர் கல்வி முறையை நிர்வகித்து வந்தாலும், வளர்ந்த நாடுகளை விட மிகவும் பின்தங்கி இருப்பதையே புள்ளி விவரங்கள் காட்டுகிறது. நமது கல்வி முறையால் பெருமைப்படும் அளவுக்கு போதுமான காரணங்கள் இருக்கின்றன. ஆனாலும், இன்னும் அடையவேண்டியது நிறைய உண்டு.
11-வது ஐந்தாண்டு திட்டத்தில் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு வெகுவாக உயர்த்தியுள்ளது. முறையாக கண்காணித்து கல்வி சூழலின் தரத்தை உயர்த்த அவை சரியாக பயன்படுத்தப்பட வேண்டும். தற்போதைய நிலவரப்படி, பள்ளி முடிக்கும் மாணவர்களில் 10 விழுக்காட்டினர் மட்டுமே கல்லூரி படிப்பிற்கான சேர்க்கை தகுதியை பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை வளர்ந்த நாடுகளில் 40 முதல் 50 விழுக்காடாக உள்ளது.
தரமான கல்வியை ஒப்பிடும்போது, 90 விழுக்காடு கல்லூரிகள், மூன்றில் இரண்டு பங்கு பல்கலைக்கழகங்கள் குறிப்பிட்ட தகுதிக்கு கீழ் உள்ளன. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பூர்த்தி செய்யும் வகையிலான பாடத்திட்டங்கள் தான் பொதுவான தேவையாக உள்ளது. அதற்கு பல்கலைக்கழங்களில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். பல்கலைக்கழகங்கள் உலகத்துடன் ஒன்றி செல்ல சென்று, பல்வேறு துறைகளில் நிபுணர்களை உருவாக்க வேண்டும். இந்தியா வளர்ந்த நாடாக உயர்கல்வியில் தரமான மாற்றங்களை கொண்டுவர வேண்டியது அவசியம்' என்றார்.