டெல்லியில் சீனத் தூதரகத்தைத் தாக்க முயன்ற திபெத்தியர்கள் கைது!
சனி, 15 மார்ச் 2008 (15:41 IST)
திபெத் தலைநகர் லாசாவில் துறவிகளின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து டெல்லியில் உள்ள சீனத் தூதரகத்தை முற்றுகையிட்டுத் தாக்க முயன்ற 50க்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
திபெத்தில் கலவரம்!
திபெத் தலைநகர் லாசாவில் இன்று சீன ஆட்சியை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டங்களில் வன்முறை வெடித்திருக்கிறது.
கடைகள், கார்கள் உள்பட சீனாவுடன் தொடர்புடைய சொத்துக்களை திபெத்தியர்கள் அடித்து நொறுக்கியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவரை மேற்கொள் காட்டி பி.பி.சி. நிறுவனம் தெரிவிக்கிறது.
லாசாவின் பல்வேறு பகுதிகளில் வன்முறையைக் கட்டுப்படுத்த சீனப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 10 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயமடைந்தனர் என்று சீனாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் கூறுகிறது.
முன்னதாக திபெத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களிலும், முக்கிய குடியிருப்புப் பகுதிகளிலும் சீனப் படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டு உள்ளனர்.
ஏற்கெனவே, மூன்று மடாலயங்களுக்கு சீனப் படையினர் சீல் வைத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தூதரகத்தைத் தாக்க முயற்சி!
திபெத்தில் சீனப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும், திபெத் பகுதியை சீனா தனது கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கக் கோரியும் டெல்லியில் திபெத்தியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சாணக்கியபுரி பகுதியில் திரண்ட பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்ட திபெத்தியர்கள், காலை 11.00 மணியளவில் அங்குள்ள சீனத் தூதரகத்தை நோக்கிப் பேரணியாக வந்தனர்.
சீனாவிற்கு எதிரான முழக்கங்களை எழுப்பியபடி வந்த அவர்கள், தூதரகத்தை முற்றுகையிட்டதுடன், பாதுகாப்பு வளையங்களை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைய முயன்றனர்.
இதையடுத்து அங்கு பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருந்த காவலர்கள், தூதரகத்திற்குள் நுழைய முயன்ற திபெத்தியர்கள் அனைவரையும் கைது செய்தனர்.