ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, முன்கூட்டியே தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுவது பற்றிக் கேட்டபோது, தேர்தல் திட்டமிட்டபடி உரிய காலத்திலேயே நடைபெறும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
வாரணாசியில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்துள்ள பிரதமர் நேற்றிரவு செய்தியாளர்களிடம் பேசிய போது இதனைத் தெரிவித்தார்.
மேலும் தேர்தலைக் கருத்தில் கொண்டே மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக வெளியான தகவலையும் பிரதமர் நிராகரித்துள்ளார்.
தேர்தல் குறித்த யூகங்கள் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, குறைந்தது இந்த ஆண்டிலாவது மக்களவைத் தேர்தல் நடைபெறாது என்று அவர் பதிலளித்தார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தைப் பிரித்து சிறிய மாநிலங்கள் உருவாக்குவதில் முதல்வர் மாயாவதி அரசு ஆதரவு தெரிவித்து வருவது பற்றிக் கேட்டதற்கு, இதுபற்றி மாநில அரசிடம் இருந்து திட்டம் அனுப்பப்படுமானால் அதுபற்றி மத்திய அரசு பரிசீலனை செய்யும் என்று பிரதமர் பதிலளித்தார்.