பங்குச் சந்தை பாதிப்பு- சிதம்பரம் பதில்!

வெள்ளி, 14 மார்ச் 2008 (19:38 IST)
பங்குச் சந்தை என்பது இந்திய பொருளாதாரத்தை ஒட்டு மொத்தமாக பிரதிபலிக்கும் கண்ணாடி அல்ல. உலக பொருளாதார நெருக்கடியால் பங்குகளின் விலைகள் ஒரே மாதிரியாக இல்லாமல் அடிக்கடி ஏற்ற இறக்கத்துடன் உள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.

மக்களவையில் இன்று பட்ஜெட் விவாதத்திற்கு பதிலளித்து பேசும் போது சிதம்பரம் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் பேசுகையில், உலக அளவில் மற்ற நாடுகளில் ஏற்படும் மாற்றங்கள் பங்குச் சந்தையில் பிரதிபலிக்கின்றன. இது வளர்ந்த நாடுகளின், ஆசிய நாடுகளின் பொருளாதார நிலைமையின் அடிப்படையில் செயல்படுகிறது.

சர்வதேச அளவில் பொருளதார நெருக்கடி ஏற்படும் போது, இந்திய பங்குச் சந்தையிலும் பங்குகளின் விலைகளில் மாற்றம் இருக்கும்.

பொருளாதார வலிமைக்கு பங்குச் சந்தையின் நிலவரம் ஒரு முக்கியமான அம்சமாகும். ஆனால் இந்தியாவின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தையே பங்குச் சந்தைதான் பிரதிபலிப்பதாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 30 பங்குகளின் விலையில் ஏற்படும் மாற்றதையும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி பிரிவில் உள்ள 50 அல்லது 100 பங்குகளின் விலை உயர்வது அல்லது குறைவதையும் எடுத்துக் காட்டுகிறது.

இந்திய பங்குச் சந்தையில் சிறந்த முறையில் கண்காணிப்பு அமைப்பு செய‌ல்படுகிறது. இதனால் அளவுக்கு மீறி பங்குகளின் விலையில் மாற்றம் இல்லாமல் கண்காணிக்கப்படுகிறது.

இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பதற்கு, அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மட்டும் காரணம் அல்ல. இத்துடன் இந்தியாவில் உற்பத்தி செலவு குறைவாக இருப்பதும் காரணமாகும்.

அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பில் மட்டுமே இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளது. டாலர் மதிப்பு குறைவதற்கு அமெரிக்க நிலையே காரணம்.

அதே நேரத்தில் யூரோ, யென் நாணயங்களுக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிக்கவில்லை என்று சிதம்பரம் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்