ரூ.2,470 கோடி செலவில் கட்டப்பட்ட ஹைதராபாத் விமான நிலையம் இன்று திறப்பு!

வெள்ளி, 14 மார்ச் 2008 (16:26 IST)
ஹைதராபாத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தை (ஆர்.ஜி.ஐ.ஏ.) காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று திறந்து வைக்கிறார்.

ஹைதராபாத்தில் இருந்து 35 கி.மீ. தொலைவில் சம்ஷாபாத்தில் ரூ.2,470 கோடி மதிப்பில் கிரீன்ஃபீல்டு சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. ஆஸ்லோ, ஹாங்காங், கோலாலம்பூர், சிங்கப்பூர் ஆகிய விமான நிலையங்களில் உள்ள வசதிகள் அனைத்தும் ராஜிவ்காந்தி சர்வதேச விமான நிலையத்தில் செய்யப்பட்டுள்ளது. இது பூஸ்டன் விமான நிலையத்திற்கு பிறகு சக்தி, சுற்றுச்சூழல் வடிவமைப்பில் வழிகாட்டி (எல்.இ.இ.) விருதபெற்ற இரண்டாவது விமான நிலையமாகும்.

அதிகபட்ச சூரிய வெளிச்சம் கிடைக்கும் அதேநேரத்தில், வெப்பத்தை குறைக்கும் வகையில் இதன் கட்டடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய விமான நிலையத்தில் இருந்து ஆண்டுக்கு 4 கோடி பயணிகள் பயணிக்க முடியும். 10 லட்சம் டன் சரக்குகள் போக்குவரத்து பரிவர்த்தனை நிகழும்.

4.6 கி.மீ.ஓடுதளத்தை கொண்டுள்ள இந்த விமான நிலையத்தில் ஏ380 விமானம் எந்தவித சிரமமின்றி இறங்கி, புறப்பட்டு செல்ல முடியும். இதுதவிர, விமான நிலையத்தில் ஒரேநேரத்தில் 3,600 கார்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்த வசதியும் செய்யப்பட்டுள்ளது. பொது பயன்பாட்டு கருவி உதவியுடன் 60 'செக்-இன்' மையங்களும், 16 சுய 'செக்-இன்' சிறுவழிகளும் உள்ளன. 2 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட வளாகத்தில் 12 புறப்பாட்டு மையங்களும், 45 வருகை மையங்களும், சில்லரை வர்த்தக கடைகளும் உள்ளன.

இத்தனை வசதிகளைக் கொண்ட தனித்துவமிக்க விமான நிலையத்திற்கு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவாக அவரது பெயர் வை‌க்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தை ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி இன்று மாலை 3.30 மணிக்கு திறந்து வைக்கிறார். அதனைத்தொடர்ந்து, ராஜமுன்டரியில் டாடிபுடி புஷ்காரா வடிகால் திட்டத்தை துவக்கி வைக்கிறார்.

மா‌ர்‌ச் 16ஆம் தேதி நள்ளிரவில் இருந்து வணிக ரீதியிலான விமானங்கள் இந்த விமான நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்