ஊனமுற்றோருக்கான சிறப்பு இணைய தளம் புனர்பவா!
வியாழன், 13 மார்ச் 2008 (18:35 IST)
இயலாதவர்கள், உடல் ஊனமுற்றோர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள தேச அளவிலான ஒருங்கிணைந்த தகவல் இணைய தளம் புனர்பவா.இன் (punarbhava.in) இன்று துவங்கப்பட்டது.
மறுவாழ்வு என்ற பொருள் பொதிந்த இந்த இணைய தளத்தை மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்ப இணையமைச்சர் டாக்டர் ஷகீல் அகமது, மத்திய சமூக நீதி அமைச்சர் மீரா குமார் ஆகியோர் டெல்லியில் துவங்கி வைத்தனர்.
இவ்விழாவில் பேசிய அமைச்சர் டாக்டர் ஷகீல் அகமது, "எல்லா சிறப்பம்சங்களும் நிறைந்த சமூகத்தை கட்டியெழுப்பும் வகையில் அனைவருக்கும், குறிப்பாக இயலாதவர்களுக்கு சேவை புரியும் கடமை எனது அமைச்சகத்திற்கு உள்ளது. வலிமையான சமூகத்தை உருவாக்குவதற்கும், அதன் மக்களின் நலன்களைப் பாதுகாப்பது குறித்துத் தெரிந்து கொள்வதற்கும் இதுபோன்ற முயற்சிகள் உதவும்" என்றார்.
இந்த இணைய தளம் மொத்தம் 3 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.
முதல் பகுதியில் உள்ள தேசிய ஊனமுற்றோர் பதிவேட்டின் மூலம், இந்தியாவில் உள்ள இயலாதவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றோர்களின் எண்ணிக்கையைத் தெரிந்து கொள்ள முடியும்.
இரண்டாவது பகுதியில், இயலாதவர்களுக்கான ஒலி, ஒளிப்பட ஆவணங்கள், இந்திய மொழிகளில் பிரெய்ல் ஆவணங்கள், பாடப் புத்தகங்கள், செய்தி இதழ்கள் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டுள்ளன.
இணைய தளம் மூலம் புகார் அளித்தல், குறை தீர்க்கும் மையங்களின் விவரங்கள் போன்றவை மூன்றாவது பகுதியில் உள்ளன. இதில் பதிவு செய்யப்படும் புகார்கள் ஊனமுற்றோருக்கான தேசிய ஆணையர், தேசிய அறக்கட்டளை, தேசிய மறுவாழ்வுக் கழகம் ஆகியோரிடம் பிரித்து அனுப்பப்படும்.
மத்திய அரசு கொடுக்கும் நிதியுதவிகளைக் கூட தங்கள் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகப் பெற இயலாதவர்களால் முடியும்.
சமூகத்தில் ஒரு பயனுள்ள மனிதர்களாக ஊனமுற்றோர் தங்களை உருவாக்கிக் கொள்ளும் வகையிலும், சமூக வாழ்க்கையில் முழுமையாகப் பங்கேற்பதற்கான வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்கும் வகையிலும் மத்திய அரசின் இரண்டு அமைச்சகங்கள் இணைந்து முயற்சி எடுப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மீடியா லேப் ஏசியா மற்றும் இந்திய மறுவாழ்வுக் கழகம் ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ள இந்த ஒருங்கிணைந்த தளத்தில், இயலாதவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றோர்களுக்குத் தேவையான எல்லா வாய்ப்புகளையும் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியும்.
உடல் ஊனமுற்றோர்களுக்கான தேசியக் கொள்கைகள், சட்டங்கள், அவர்களுக்காகப் பணியாற்றும் நிறுவனங்கள், அவர்களுக்கான உதவிக் கருவிகள், கல்வி வாய்ப்புகள், வேலை வாய்ப்புகள் போன்றவற்றை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பெற்றோர்கள், சமூக உறுப்பினர்கள் என அனைவரும் எளிதில் தெரிந்து கொள்ள முடியும்.