விமான நிலைய ஊழியர்கள் போராட்டம் தொடர்கிறது!
வியாழன், 13 மார்ச் 2008 (13:17 IST)
ஹைதராபாத், பெங்களூரு விமான நிலையங்களில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள விமான நிலையங்கள் பயன்பாட்டிற்கு வரும்போது, ஏற்கெனவே உள்ள விமான நிலையங்களை மூடக்கூடாது என்று வலியுறுத்தி விமான நிலைய ஊழியர்கள் மேற்கொண்டுள்ள நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் இரண்டாவது நாளாகத் தொடர்கிறது.
இப்போராட்டத்தில் விமான நிலையங்களில் உள்ள விமானப் போக்குவரத்து சாரா சேவைப் பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்கள் மட்டும் பங்கேற்றுள்ளதால், விமானப் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லை.
இருந்தாலும், டெல்லி, மும்பை, ஹைதராபாத் விமான நிலையங்களில் சரக்குக் கையாளல், பொதுப் பராமரிப்பு, சலவைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கொல்கட்டா விமான நிலையத்தில் மின்சாரம், குடிநீர் வினியோகம் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மேற்குவங்க மாநிலம் படோக்ரா விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர் ஆர்.தாஸ் கூறுகையில், "மின் தூக்கி, நகரும் படிக்கட்டு, டிராலி சேவை, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அனைத்தும் விமான நிலையங்கள் ஆணையத்தின் கீழ்தான் வருகின்றன. இதனால் இந்தச் சேவைகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் பொறுப்பு" என்றார்.
இந்தப் போராட்டம் குறித்து மத்திய பயணிகள் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிராஃபுல் பட்டேலிடம் கேட்டதற்கு, இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் ஊழியர்களின் நலன்கள் முழுமையாகப் பாதுகாக்கப்படும் என்றார்.
“ஹைதராபாத், பெங்களூரு நகரங்களில் ஏற்கெனவே உள்ள விமான நிலையங்கள் தொடர்ந்து பொதுப் போக்குவரத்து, பாதுகாப்புத் தேவைகள், தேசியப் பேரிடர் மேலாண்மைப் பணிகள் போன்றவற்றிகுப் பயன்படுத்தப்படும்" என்றும் அவர் கூறினார்.