கப்பல் துறையில் நீண்டகால வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்: டி.ஆர்.பாலு!
செவ்வாய், 11 மார்ச் 2008 (17:49 IST)
துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறமையை வளர்க்கவும், கொள்ளளவு தடைகளை நீக்கவும், குறிப்பிட்ட பிரிவில் மனித வள ஆற்றலை மேம்படுத்தவும் கப்பல் போக்குவரத்துத் துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவுள்ளது என்று மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர். பாலு கூறியுள்ளார்.
இந்திய கடல்சார் கல்வி மையத்தின் 5-வது ஆண்டு பொதுக் குழுக் கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அவர் உரையாற்றுகையில், தற்போது பல்வேறு பெரிய துறைமுகங்களின் வர்த்தக திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. மாநில அரசுகளும் தங்களது சிறு துறைமுக செயல்பாடுகளை மேம்படுத்தும் முன்னேற்பாடுகளை செய்து வருகின்றன.
இதுபோன்ற விரிவாக்கப் பணிகள் கப்பல் துறையில் பயிற்சி பெற்ற, திறமையான தொழிலாளர்களின் தேவைகளை அதிகரிக்கும். தற்போது கப்பல் துறை அதிகாரிகள் சுமார் 10 ஆயிரம் பேர் தேவைப்படுகின்றனர். இது 2015-ம் ஆண்டில் 3 மடங்காக அதாவது சுமார் 27 ஆயிரமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இனிவரும் காலங்களில் 8 முதல் 10 ஆண்டு வரையிலான குறுகிய கால வேலை வாய்ப்புகள் பயன்தராது. நீண்ட கால வேலை வாய்ப்புகளே இன்றைய தேவை. கடல்சார் பல்கலைக் கழகம் செயல்படுத்தப்படும் பட்சத்தில் இந்தத் தேவை எளிதில் பூர்த்தியாகும்.
கடல்சார் பல்கலைக் கழகம் அமைக்கப்படும்போது தற்போது கடல்சார் துறையில் உள்ள சிறப்பம்சங்களை ஒருங்கிணைப்பதோடு, தரமான கல்வியையும் ஒருங்கிணைந்த பயிற்சிக்கான வழிமுறையையும் ஏற்படுத்தும். கப்பல் பயிற்சிகளுக்கு உதவி, அத்துடன் பணிக் காலத்திலேயே டிப்ளமோ, டிகிரி சான்றிதழ்கள், ஆய்வுப் பணிகள் மேற்கொள்வது வாய்ப்புகள், கப்பல் துறையை நவீனப்படுத்துதல் ஆகியவற்றுக்கு வாய்ப்புகள் இருக்கும்.
இந்திய கடல்சார் கல்வி மையத்தின் கீழ் உள்ள நிறுவனங்களில் கடந்த 2005-06-ம் ஆண்டில் 5,140 மாணவர்கள் பயின்றனர். 2006-07-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 6,299 ஆக உயர்ந்தது. இது மகிழ்ச்சியான விஷயமாகும். இவர்களுக்கு வெற்றிகரமாக வேலை வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2008-09-ம் நிதியாண்டுத் திட்டங்களில், புதிய சிமுலேட்டர்கள் வாங்குவது, தற்போது இருப்பதை நவீனப்படுத்துவது, ஐ.ஐ.எம்.எஸ். கீழ் செயல்படும் நான்கு மையங்களில் விடுதிகளை மேம்படுத்துவது, கப்பலில் உள்ள புதிய தொழில்நுட்பங்கள் குறித்து ஆய்வுப் பயிற்சிக்கான உபகரணங்கள் வாங்குவது ஆகியவை அடங்கும். இந்திய கடல்சார் கல்வி திட்டத்தின் வருவாய் ரூ.20.34 கோடி, செலவு 18.70 கோடி ஆகும் என்று அமைச்சர் டி.ஆர்.பாலு கூறினார்.