விமான நிலைய மேம்பாட்டு பணிகள் 2010-ல் முடிவடையும்: பிரஃபுல் படேல்!
செவ்வாய், 11 மார்ச் 2008 (17:48 IST)
இந்திய விமானப் போக்குவரத்து ஆணையத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் 35 மெட்ரோ அல்லாத நகரங்களின் விமான நிலையங்களை நவீனப்படுத்தும் பணி மார்ச் 2010-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் பிரஃபுல் படேல் இன்று மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.
மதுரை, திருச்சி உட்பட 24 விமான நிலையங்களில் புதிய போக்குவரத்து முனையங்கள் அமைக்கப்படவுள்ளன. மேலும் கோவை உள்ளிட்ட 11 விமான நிலையங்களுக்கு தற்போதுள்ள விமான நிலையத்தை நவீனப்படுத்தல், விரிவாக்கும் பணியும் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்த விமான நிலையங்களில் அகலமான விமானங்களின் போக்குவரத்திற்கான ஓடுதளத்தை அமைத்தல், விமானங்களை நிறுத்துவதற்காக இடங்களை விரிவாக்கல் அல்லது புதிதாக உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தேவைக்கு ஏற்ப மேற்கொள்ளப்படும்.
இந்த 24 விமான நிலையங்களில் பொது, தனியார் துறை பங்கேற்பின் மூலம் பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அமிர்தசரஸ் மற்றும் உதய்பூர் விமான நிலையங்களுக்கான முன்தகுதி ஒப்பந்தங்கள் பெறப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.