நாடாளுமன்றத்தில் பா.ஜ.க.- மார்க்சிஸ்ட் மோதல்!
செவ்வாய், 11 மார்ச் 2008 (15:16 IST)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் தாக்கப்பட்டது தொடர்பாக மக்களவையில் இன்று பா.ஜ.க., மார்க்சிஸ்ட் கட்சிகளின் உறுப்பினர்கள் இடையே நடந்த கடும் வாக்குவாதத்தால் ஏற்பட்ட அமளியால் அவை இருமுறை தள்ளி வைக்கப்பட்டது.
மக்களவை இன்று துவங்கியதும் கேள்வி நேரத்தை தள்ளி வைத்துவிட்டு மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் மீதான தாக்குதல் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று அக்கட்சியின் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்தக் கோரிக்கையை நிராகரித்த அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, கேள்வி நேரம் முடிந்த பிறகு நேரமில்லா நேரத்தின் போது விவாதத்திற்கு அனுமதிப்பதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து நேரமில்லா நேரத்தின் போது எழுந்த மார்க்சிஸ்ட் உறுப்பினர் பாசுதேவ் ஆச்சாரியா, தனது கட்சியின் தலைமை அலுவலகத்தின் மீது கடந்த ஞாயிற்றுக் கிழமை நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பெரும்பாலான கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளதாகவும், ஆனால், பெங்களூரு, டேராடூன் மற்றும் கேரளா ஆகிய இடங்களில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகங்கள் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
மற்ற இடதுசாரிக் கட்சிகள், சமாஜ்வாதி கட்சி, ஆர்.ஜெ.டி. உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவளித்தனர்.
அப்போது தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்ற பா.ஜ.க. உறுப்பினர்கள், ஆச்சாரியா பேசுவது மாநிலங்களின் விவகாரம் என்பதால் அதுபற்றி விவாதிக்க அனுமதிக்கக் கூடாது என்று அவைத் தலைவரிடம் கோரிக்கை விடுத்தனர்.
பா.ஜ.க. உறுப்பினர்களின் கோரிக்கையை அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி நிராகரித்தார். ஆனாலும், பா.ஜ.க. உறுப்பினர்களுக்கும் மார்க்சிஸ்ட் உறுப்பினர்களுக்கும் இடையில் வாக்குவாதம் நீடித்ததால் வேறு வழியின்றி அவையை 30 நிமிடங்களுக்கு தள்ளி வைத்து சாட்டர்ஜி உத்தரவிட்டார்.
அவை மீண்டும் கூடியபோதும் இதே நிலை நீடித்ததால் அவை மதியம் 1.30 மணி வரை தள்ளி வைக்கப்பட்டது.
மாநிலங்களவையிலும் அமளி!
மாநிலங்களவையிலும் இன்று இரண்டாவது நாளாக அமளி நீடித்தது.
கேள்வி நேரம் முடிந்தவுடன் எழுந்த மார்க்சிஸ்ட் உறுப்பினர் பிருந்தா காரத், "பா.ஜ.க.வினர் நடவடிக்கை சகிக்க முடியாதது. இதுவும் ஒரு அரசியல் வன்முறைதான்" என்றார்.
ஹைதராபாத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகத்தைத் தாக்க முயன்ற பா.ஜ.க. தொண்டர்கள், விடுதலைப் போராட்ட வீரர் சுந்தரய்யாவின் உருவப்படத்தை எரிக்க முயன்றதையும் குறிப்பிட்ட பிருந்தா காரத், இதுகுறித்து உள்துறை அமைச்சகம் விளக்கமளிக்க வேண்டும் என்றார்.
இதையடுத்து எழுந்த பா.ஜ.க. உறுப்பினர் வெங்கையா நாயுடு, மேற்குவங்க மாநிலம் நந்திகிராமில் நடந்த வன்முறைகள் தொடர்பாக இடதுசாரிகள் மெளனம் சாதிப்பதாகக் குறிப்பிட்டதுடன், கேரளாவில் அப்பாவி மக்களை மார்க்சிஸ்ட் தொண்டர்கள் கொன்று குவித்துள்ளதாக குற்றம்சாற்றினார்.
இதைத் தொடர்ந்து பா.ஜ.க., மார்க்சிஸ்ட் உறுப்பினர்கள் தங்கள் இருக்கையில் இருந்து எழுந்து சென்று அவைத் தலைவரை முற்றுகையிட்டனர். இதனால் வேறு வழியின்றி அவையை 5 நிமிடங்களுக்கு தள்ளி வைப்பதாக அவைத் தலைவர் அறிவித்தார்.