கருத்தொற்றுமையுடன் அணு சக்தி ஒப்பந்தம் : பிரதமர்!

புதன், 5 மார்ச் 2008 (14:05 IST)
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கையை அதிகபட்ச கருத்தொற்றுமையுடன் மேற்கொள்ள அரசு முயற்சிக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்!

மக்களவையில் இன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் பேசுகையில் இவ்வாறு கூறினார்.

நமது நாட்டின் எரிசக்தித் தேவையை தீர்க்க பொருளாதார வளர்ச்சியை தக்கவைக்கவும், அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் அவசியமானது என்று கூறிய பிரதமர், அதனை நிறைவேற்றிட சர்வதேச அணு சக்தி கண்காணிப்பு முகமையுடன் பேசி வருவதாகவும் தெரிவித்தார்.

இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் நமக்கும், நமது எரிசக்தித் தேவைக்கும், அது தொடர்பான உலகளாவிய ஒத்துழைப்பிற்கும் அவசியமானது என்று பிரதமர் கூறினார்.

இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் ஆலோசகராக இருந்த பிரஜேஷ் மிஸ்ரா வெளிப்படையாக ஆதரவு தெரிவித்ததை சுட்டிக்காட்டிய பிரதமர், அணு சக்தி பிரச்சனை தற்பொழுதுள்ள அரசு எதிர்பார்ப்பதை விட மிகக் குறைவான அளவில் அதனை ஏற்றுக்கொள்ள முந்தைய அரசு தயாராக இருந்தது என அமெரிக்க முன்னாள் அயலுறவு துணை அமைச்சர் ஸ்ட்ரோக் டால்போர்ட் கூறியுள்ளதை சுட்டிக்காட்டினார்.

அதற்கு, பா.ஜ.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துப் பேசினர். பிரதமர் உரையாற்றி முடிந்ததும் பேச எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி, அணு சக்தி பிரச்சனையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பற்றி பிரதமர் கூறிய கருத்துகள் அடிப்படையற்றவை, உண்மையற்றவை என்று குற்றம் சாற்றினார்.

அதன்பிறகு பா.ஜ.க. உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்