கிறிஸ்துவ, இஸ்லாமிய தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு?
திங்கள், 3 மார்ச் 2008 (19:34 IST)
கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களை சார்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலிப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.
பேராசிரியர் குரியன், சரத் யாதவ், தரிக் அன்வர் ஆகியோர் எதற்காக இந்த குறிப்பிட்ட மதத்தவருக்கு மட்டும் சலுகை மறுக்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பியதற்கு ஹிந்து, புத்தம், ஜைனம் அகிய மதங்களை சேர்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மட்டும் எஸ்.சி., பிரிவின்கீழ் வருவதாக மத்திய அரசு தெரிவித்தது.
இதை ஏற்றுகொள்ள மறுத்த அவர்கள் கிறித்தவ, இஸ்லாமிய மதங்களைச் சார்ந்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு சலுகை வழங்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மத்திய அமைச்சர் மீரா குமார், "அரசியலமைப்பு சட்டப்பிரிவு 21, உட்பிரிவு 'பி' யின்படி, ஹிந்துசத்தில் சீக்கியம், புத்தம், ஜைனம் ஆகிய மதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தேசிய சிறுபான்மை மத ஆணையம் இஸ்லாம், கிறிஸ்தவம் சார்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய இடஒதுக்கீடு அளிக்க பரிந்துரைத்துள்ளது. எஸ்.சி., பிரிவுக்கான தேசிய ஆணையத்திடம் இதுகுறித்து ஆலோசனை கேட்கப்படும். இதற்கு எந்த எதிர்ப்பும் அவர்கள் தெரிவிக்கவில்லை என்றால் பிறகு பரிசீலிக்கப்படும். இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே உச்ச நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றங்களிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது" என்றார்.