அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவிற்கு அவசியம்: பிரணாப் முகர்ஜி!
திங்கள், 3 மார்ச் 2008 (16:10 IST)
சர்வதேச அணு எரிபொருள் வணிகத்தில் இந்தியா தனித்து விடப்படுவதைத் தவிர்ப்பதற்காக இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் நடைமுறைக்கு வரவேண்டியது அவசியம் என்று மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.
மக்களவையில் இன்று அயலுறவுக் கொள்கைகள் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து அமைச்சர் பிரணாப் முகர்ஜி வாசித்த அறிக்கையில், சர்வதேச அணுசக்தி வணிகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக இந்தியா தனித்து விடப்பட்டுள்ள நிலையை முடிவிற்குக் கொண்டுவர இந்த ஒப்பந்தம் அவசியம் என்றார்.
அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் விரிவான அரசியல் கருத்தொற்றுமையை ஏற்படுத்தும் முயற்சிகளை மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.
இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தவும், பிற நாடுகளுடன் இதேபோன்ற ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும் தேவையான இந்தியாவிற்கான தனித்த கண்காணிப்பு ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச அணுசக்தி முகமையுடன் நடத்தப்படும் பேச்சுகள் விரைவில் முடிந்துவிடும் என்று கூறிய பிரணாப் முகர்ஜி, அதில் இந்தியாவிற்குச் சாதகமானதும், அணு எரிபொருள் வழங்கு நாடுகள் குழு ஏற்றுக் கொள்ளக் கூடியதுமான அம்சங்கள் அதிகம் இடம்பெறும் என்றார்.
இதன்மூலம், ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுடன் பேச்சு நிலையில் உள்ள அல்லது இறுதி நிலையில் உள்ள அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் அனைத்தும் நிறைவேறுவதற்கு வழி பிறக்கும் என்றும் அவர் கூறினார்.
மேலும், நம்முடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு அமெரிக்க அரசின் அரசியல் நிர்வாக அமைப்புகளுக்கு அனுமதியளிக்கும் சாவி தான் ஹைட் சட்டமே தவிர அதனால் இந்தியாவிற்கு எந்த பாதிப்பும் இல்லை என்றார் பிரணாப் முகர்ஜி.