பீகார் மாநிலம் நவாடா மாவட்டம் அகர்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் காவல் துறையினர் மேற்கொண்ட வாகனத் தணிக்கையின் போது லாரி ஒன்றை மடக்கிப் பிடித்தனர்.
அந்த லாரியில் இருந்து 120 கிலோ டெட்டனேட்டர், 6 டன் ஜெலட்டின் குச்சிகள், 10 கிலோ பியூஸ் வயர் உள்ளிட்ட வெடிபொருட்கள் இருந்தது. மேலும் லாரியின் உள்ளே ஒரு மாருதி வேனும் இருந்தது.
இவையனைத்தையும் பறிமுதல் செய்த காவல் துறையினர், மான் சிங், ராஜி (மத்தியப் பிரதேசம்), சுபோத் சிங், சனோஜ் குமார், முன்னா குமார், கருரவி தாஸ், தியாவித் குமார் (பீகார்) ஆகிய 7 பேரைக் கைது செய்தனர். அவர்கள் நக்சலைட் அமைப்பை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்பது சந்தேகிக்கப்படுகிறது.
இது தொடர்பாக காவல் துறைக் கண்காணிப்பாளர் குமார் கூறுகையில், "நக்சலைட்டுகள் நடமாட்டம் குறித்து எங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் கடந்த 15 தினங்களாக வாகன சோதனை நடத்தி வந்தோம். இந்த லாரி மத்தியப் பிரதேசத்தில் இருந்து வந்தது. பல்வேறு இடங்களில் நாசவேலையில் ஈடுபடுவதற்காக வெடிகுண்டுகள் அனுப்பப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது" என்றார்.