பெண்களுக்கு இடஒதுக்கீட்டு சட்ட முன்வரைவு: அத்வானி வலியுறுத்தல்!
வியாழன், 21 பிப்ரவரி 2008 (20:03 IST)
மன்மோகன் சிங் தலைமையிலான மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட முன்வரைவைத் தாக்கல் செய்தால் அதனை பா.ஜ.க. ஆதரிக்கும் என்று அத்வானி தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் பாரதீய ஜனதா கட்சியின் மகளிர் அணியினரின் பேரணியைத் தொடர்ந்து ராம்லீலா மைதானத்தில் நடைப்பெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் அத்வானி, நாடு முழுவதும் உள்ள பெண்களின் விருப்பத்தை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
பெண்கள் தங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்பதற்காக நாட்டின் மூலைமுடுக்கில் இருந்து எல்லாம் இங்கு வந்து கூடியுள்ளதைப் பார்த்தாவது மன்மோகன் சிங் புரிந்து கொள்ள வேண்டும் என்ற அத்வானி, வரும் 25 ஆம் தேதி துவங்க உள்ள நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்ட முன் வரைவை மத்திய அரசு தாக்கல் செய்தால் அதை பா.ஜ.க. ஆதரிக்கும் என்றார்.
கடந்த 1994 ஆம் ஆண்டு படோதராவில் நடந்த பா.ஜ.க. வின் தேசிய செயற்குழு கூட்டத்தில் தான் முதன் முதலாக நாடாளுமன்றத்தின் இரு அவைகள், மாநில சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டதாகவும், 1998 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த போதும் இதனை நிறைவேற்ற கட்சி கடுமையாக உழைத்ததாகவும் அத்வானி குறிப்பிட்டார்.
இந்த பேரணியைப் பார்த்த பின்னராவது நாட்டின் மக்கள் தொகையில் 50 விழுக்காட்டினராக உள்ள பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க இந்த அரசு முன்வர வேண்டும் என அத்வானி வலியுறுத்தினார்.