ராஜ் தாக்ரே, அபு அசிம் ஆஜ்மி பிணையில் விடுதலை!வன்முறையில் ஒருவர் பலி!!
புதன், 13 பிப்ரவரி 2008 (21:08 IST)
தனது கட்சியின் தொண்டர்களைத் தூண்டி வன்முறையில் ஈடுபடச்செய்ததாகக் குற்றம்சாற்றப்பட்டு கைது செய்யப்பட்ட மஹராஷ்ட்ர நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்ரே பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் வழக்குத் தொடரப்பட்டு இன்று மாலை 4.15 மணியளவில் கைது செய்யப்பட்ட ராஜ் தாக்ரேயை, விக்ரோலி நீதிமன்றத்தில் காவல் துறையினர் நிறுத்தினர். அவரை ரூ.15,000 சொந்த பிணையில் விடுவிப்பதாக நீதிபதி உத்தரவிட்டதும், கைது செய்து அழைத்துச் சென்ற அதே காவல் வாகனத்தில் மீண்டும் அவருடைய வீட்டிற்கு கொண்டு சென்று விட்டது காவல்துறை.
ராஜ் தாக்ரே மீது தொடரப்பட்ட அதே பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்ட சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அபு அசிம் ஆஜ்மி, போய்வாடா நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். அவரை ரூ.10,000 சொந்த பிணையில் விடுவிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.
ராஜ் தாக்ரே கைது செய்யப்படுவதால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுவதைத் தடுக்க மஹாராஷ்ட்ரா நவ நிர்மாண் சேனாவைச் சேர்ந்த 2,000 பேர் முன்னெச்சரிக்கை கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், நாசிக் நகரில் தொடர்ந்து வன்முறை நடந்து வருகிறது. அங்கு பேருந்து ஒன்றின் மீது நடந்த கல் வீச்சில் காயமுற்ற பயணி ஒருவர் உயிரிழந்தார். ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிவரும் அம்பாதாஸ் ஹரிபாவ் தாரோ (வயது 55) கல்வீச்சில் கொல்லப்பட்டது மட்டுமின்றி, பேருந்து ஓட்டுனரும் படுகாயமுற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.