அணுசக்தி ஒப்பந்ததிற்கு மக்கள் அனுமதி பெறுங்கள்: காங்கிரசுக்கு பிரகாஷ் காரத் அறிவுரை!
திங்கள், 11 பிப்ரவரி 2008 (16:42 IST)
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களிடம் அனுமதி பெற்றுவந்து இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் உள்ளிட்ட எல்லாவிதமான ஒப்பந்தங்களையும் அமெரிக்காவுடன் காங்கிரஸ் கட்சி நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.
இன்றுள்ள நிலையில் அமெரிக்காவுடன் எந்த ஒப்பந்தத்தையும் செய்து கொள்ள மத்திய அரசை அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடன் இந்தியா இராணுவ ரீதியான கூட்டாளியாக மாறுவதற்கு ஏற்ற முடிவை மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எடுக்க ஒருபோதும் இடதுசாரிகள் அனுமதிக்க மாட்டார்கள். அதையும் தாண்டி அப்படி ஒரு உறவை ஏற்படுத்திக் கொள்ள காங்கிரஸ் கட்சி விரும்பினால் மக்களைச் மீண்டும் (தேர்தலில்) சந்தித்து அதற்குரிய மக்கள் பிரதிநிதித்துவத்தை அக்கட்சி பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற ஒரு ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் செய்து கொள்ள விழையும் எந்தவொரு அரசுக்கும் தங்கள் கட்சியும், மற்ற இடதுசாரிகளும் ஆதரவளிக்க மாட்டார்கள் என்றும், இடதுசாரிகள் அத்தகைய முயற்சிகளைத் தடுத்து நிறுத்துவார்கள் என்றும் தெரிவித்து உள்ளார்.
இஸ்ரேலிய உளவு செயற்கைக் கோளை இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து செலுத்தைப்பட்டதையும் அவர் குறைகூறியுள்ளார்.
உள்நாட்டைப் பொறுத்தமட்டில் மத்திய அரசு மேற்கொள்ளும் வங்கி நடைமுறைச் சீர்திருத்தங்கள், காப்பீட்டுத் துறை மாற்றங்கள், பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முடிவுகள், சில்லரை வர்த்தகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் எளிதாக நுழைவது உள்ளிட்ட நடைமுறைகளைச் செயல்படுத்தும் போது இடதுசாரிகள் ஓரு குறிப்பிட்ட அளவுக்கு எங்களுடைய கண்காணிப்புப் பணியை மேற்கொள்ளுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இடதுசாரிகளின் வலியுறுத்தல் காரணமாகவே மத்திய அரசு கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம், வனப் பழங்குடியினர் சட்டம் போன்றவற்றைக் கொண்டு வந்ததாகவும் பிரகாஷ் காரத் தெரிவித்து உள்ளார்.