100 பேர் உ‌ள்ள ‌கிராமங்களுக்கும் மின்வசதி: ம‌த்‌திய அரசு!

வெள்ளி, 8 பிப்ரவரி 2008 (10:44 IST)
ராஜிவ் காந்தி கிராம மின்மயமாக்கல் திட்டத்தின் கீழ் 100 பேர் வசிக்கும் சிறு கிராமங்களுக்கும் மின்வசதி அளிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

புது டெ‌ல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, "இதற்கு முன்னர் இந்த திட்டத்தின் கீழ் 300 அல்லது அதற்கும் கூடுதலாக மக்கள் தொகை கொண்ட கிராமங்கள் மட்டும் ராஜிவ் காந்தி கிராம மின்மயமாக்கல் திட்டத்தின் மூலம் பயன் பெற்று வந்தன" என்றார்.

மேலு‌ம் அவ‌ர் கூறுகை‌யி‌ல், "2005 ஏப்ரல் மாதத்தில் துவக்கப்பட்ட இந்த திட்டம் 2009-ம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களுக்கு மின்வசதியை வழங்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தை 11-வது ஐந்தாண்டு திட்ட காலத்திலும் தொடருவதற்காக இம்மாதம் 3-ம் தேதி அனுமதி வழங்கப்பட்டது. இதற்கான மூலதன மானியம் ரூ.28 ஆயிரம் கோடி. 10-வது திட்ட காலத்தில் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக மூலதன மானியமாக ரூ.5 ஆயிரம் கோடியை அரசு அனுமதித்திருந்தது.

ராஜிவ் காந்தி கிராம மின்மயமாக்கல் திட்டத்தின் கீழ் பயன்பெறும் கிராமங்களுக்கு குறைந்தபட்சம் 6 முதல் 8 மணி நேரத்திற்காவது மின்சாரம் விநியோகம் செய்யப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

11-வது திட்ட காலத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் குடும்பங்களுக்கு இலவச மின் இணைப்பு வழங்குவதற்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த செலவு, இணைப்பு ஒன்றுக்கு ரூ.1,500-லிருந்து ரூ.2,500-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் 45,602 கிராமங்கள் இதுவரை மின்வசதி பெற்றுள்ளன. 22.87 லட்சம் கிராம வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 18.76 லட்சம் வீடுகள் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மக்களுடையதாகும்" எ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்