அமிதாப் பச்சன் வீட்டின் மீது தாக்குதல்!
திங்கள், 4 பிப்ரவரி 2008 (13:44 IST)
இந்தித் திரைப்பட நடிகர் அமிதாப் பச்சனின் வீட்டின் மீது இன்று அதிகாலை இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த இளைஞர்கள் சிலர் கண்ணாடி பாட்டில்களை வீசித் தாக்கியுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்ட சமாஜ்வாதிக் கட்சிக்கு அமிதாப் பச்சன் ஆதரவளிப்பதற்கு மராட்டிய நவ நிர்மான் சேனா என்ற அமைப்பு கண்டனம் தெரிவித்து வருகிறது. அவ்வமைப்பின் தலைவர் ராஜ் தாக்ரே, அமிதாப்பை கடுமையாகத் தாக்கிப் பேசியதால் இருதரப்புக்கும் இடையில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இன்று அதிகாலை 1.30 மணிக்கு அமிதாப் பச்சனின் வீட்டில் இருந்த அமர் சிங்கின் ஆதவாளர்களுக்கும் வெளியில் நின்றிருந்த மராட்டிய நவ நிர்மான் சேனா அமைப்பினருக்கும் இடையில் கடுமையாக வாக்குவாதம் நீடித்ததாகவும், இறுதியில் இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கண்ணாடி பாட்டில்களை வீசித் தாக்கிக் கொண்டதாகவும் நிகழ்விடத்தில் இருந்த பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் தெரிவித்தனர்.
ஆனால், இந்நிகழ்வை காவல் துறையினர் மறுத்துள்ளனர். "அமிதாப் பச்சனின் வீட்டில் உள்ள தனியார் காவலர்களைத் தவிர எங்கள் தரப்பிலும் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்கள் கூறுவது போன்ற எந்த நிகழ்வும் அங்கு நடக்கவில்லை" என்று காவல் துறை அதிகாரி தீபக் கடேர் தெரிவித்தார்.
முன்னதாக, பெண்கள் கல்லூரி அமைக்கும் விவகாரம் ஒன்றில் மராட்டியத்தை விடுத்து உத்தரப் பிரதேசத்திற்கு அமிதாப் பச்சன் ஆதரவளித்தார் என்று கூறி அவரை ராஜ் தாக்ரே கடுமையாகத் தாக்கிப் பேசினார். இதைத் தொடர்ந்து அமிதாப்புக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. அவரின் பிரதீக்ஷா பங்களாவைச் சுற்றிலும் காவலர்கள் குவிக்கப்பட்டனர்.
நேற்று மும்பையின் புறநகர்ப் பகுதியில் மராட்டிய நவ நிர்மான் சேனா அமைப்பிற்கும், சமாஜ்வாதிக் கட்சியினருக்கும் இடையில் நேற்று ஏற்பட்ட மோதலில், போஜ்புரி மொழித் திரைப்படங்கள் ஓடிய 2 திரையரங்குகள் தாக்கப்பட்டதுடன் 5 கார்களும் சேதப்படுத்தப்பட்டன. இந்நிகழ்வில் இரு தரப்பையும் சேர்ந்த 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையில், கடந்த சனிக்கிழமை தான் ஏற்பாடு செய்திருந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தகராறு செய்ததற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மராட்டிய நவ நிர்மான் சேனா அமைப்பின் தலைவர் ராஜ் தாக்ரே உள்ளிட்ட சிலரின் மீது சமாஜ்வாதி கட்சித் தலைவரும், அமிதாப் பச்சனின் நண்பருமான அமர் சிங் நேற்றிரவு வடக்கு மும்பையில் உள்ள ஆஷாத் மைதான் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.