சிறுநீரக திருட்டு கும்பலுக்கு 48 நாடுகளில் தொட‌ர்பு!

செவ்வாய், 29 ஜனவரி 2008 (20:38 IST)
வட மாநிலங்களில் 500-க்கும் மேற்பட்ட சிறுநீரகங்களை திருடி விற்ற கும்பலுக்கு உலகம் முழுவதிலும் 48 நாடுகளில் தொட‌ர்பு இருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹரியானாயாவின் குர்கான் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அந்நகர மற்றும் உத்திர பிரதேச காவல்துறையினர் சோதனையிட்டதில் சிறுநீரக திருட்டு அம்பலமானது. இது சம்பந்தாமாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கும்பல் அப்பாவி மக்களின் சிறுநீரகத்தை எடுத்து அயல்நாட்டினருக்கு அதிக விலைக்கு விற்றுவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனையடுத்து, கடந்த ஆறு ஆண்டிகளாக 500-க்கும் மேற்பட்ட சிறுநீரகங்களை திருடி விற்ற அதிர்ச்சி தகவலும் வெளியானது. இந்நிலையில் இந்த கும்பல் உலகம் முழுவதிலும் 48 நாடுகளில் மிகப்பெரிய நெட்வொர்க் வைத்திருப்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

"இந்த கும்பலின் தலைவனான டாக்டர் அமித் அகர்வாலின் மனைவி கனாடாவை சேர்ந்தவர். அவரது துணையுடன் அயல்நாடுகளில் நெட்வொர்க் அமைத்து சட்டவிரோதமாக சிறுநீரகம் விற்றுள்ளார். அமெரிக்கா, ரஷ்யா, கனடா, கிரேக்க நாடுகளில் டாக்டர் அகர்வாலுக்கு தொடர்புள்ளது" என்று மொரதாபாத் காவல்துறை உயர் அதிகாரி பிரேம் பிரகாஷ் கூறினார்.

சிறுநீரக திருட்டு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, டெல்லியில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகள், உடல் பரிசோதனை மையங்கள், மருத்துவ கல்வி நிறுவனங்களில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

குர்கான் காவல்துறையினர் டாக்டர் அகர்வாலின் சொத்துக்களை தீவிரமாக ஆய்வு செய்துள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை!

இச்சம்பவம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது:

மும்பை, நொய்டா, குர்கான் போன்ற பல்வேறு பகுதிகளிலும் சிறுநீரக திருட்டு நடந்துள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ள இவ்வழக்கு விரைவில் சி.பி.ஐ.-யிடம் ஒப்படைக்கப்படும். சிறுநீரகம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க ஹரியானா அரசிடம் வலியுறுத்தப்படும். வருகினற நிதி நிலை கூட்டத்தொடரில் தேசிய உடல் உறுப்பு மாற்று சட்டத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, சட்டவிரோதமாக உடல் உறுப்புகளை மாற்றும் செயலுக்கு அதிக தண்டனை வழங்க பரிந்துரைக்கப்படும். அனைத்து உடல் உறுப்பு மாற்றம் குறித்தும் இணையதளத்தில் தகவல் வெளியிடப்படும்.

இதுகுறித்து தேசிய அளவில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். உடல் உறுப்பு தானம் வலியுறுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்