சேதுக் கால்வாய் : மேலும் கால அவகாசம் கேட்க மத்திய அரசு முடிவு?

செவ்வாய், 29 ஜனவரி 2008 (20:33 IST)
சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்திற்காக தோண்டப்படும் கடற்பகுதியில் உள்ள நிலத் திட்டுக்கள் ராமர் பாலமா இல்லையா என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டிய மனுவிற்கு மேலும் கால அவகாசம் கேட்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன!

சேது சமுத்திரக் கடற்பகுதியில் ராமேஸ்வரத்திற்கும், இலங்கைக்கும் இடையேயுள்ள மணல் திட்டுக்கள் ராமர் பாலமே என்றும், கப்பல் போக்குவரத்திற்காக அப்பகுதியை ஆழப்படுத்துவதற்கு அதனை இடிக்க அனுமதிக்கக் கூடாது என்று சுப்பிரமணியம் சுவாமி தொடர்ந்த வழக்கில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய அரசிற்கு உச்ச நீதிமன்றம் 2 வார அவகாசத்தை அளித்தது.

உச்ச நீதிமன்றம் அளித்த அவகாசம் நாளையுடன் முடிகிறது. இந்த நிலையில், பதில் மனு தாக்கல் செய்வது தொடர்பாக அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், எனவே மத்திய அரசு மேலும் கால அவகாசம் கேட்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாக பி.டி.ஐ. செய்தி கூறுகிறது.

சேது கடற்பகுதியில் உள்ளது ராமர் பாலம் அல்ல என்றும், இயற்கையால் உருவான நிலத் திட்டுக்கள்தான் என்றும் மத்திய அரசு நியமித்த நிபுணர் குழு தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில், மத்திய அரசின் கப்பல் போக்குவரத்துத்துறை உருவாக்கிய அமைச்சரவை வரைவை பண்பாட்டு அமைச்சகம் ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

சேது சமுத்திரக் கடற்பகுதியில் உள்ள நிலத்திட்டுக்கள் மனிதனால் கட்டப்பட்டது என்று கூறுவதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரம் ஏதுமில்லை என்று மட்டும் கூறிட வேண்டும் என பண்பாட்டு அமைச்சகம் கூறுவதாகவும், அது இயற்கையாக உருவானதுதான் என்றும், மனிதனால் உண்டாக்கப்பட்டது அல்ல என்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளதால் கருத்து வேற்றுமை ஏற்பட்டுள்ளதாகவும் அச்செய்தி கூறுகிறது.

இந்த நிலையில், மத்திய அரசு நாளை மேலும் கால அவகாசம் கேட்கும் பட்சத்தில் அதனை உச்ச நீதிமன்றம் ஏற்குமா என்பது தெரியவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்