வேளாண் ஆராய்ச்சியை மறுசீரமைக்க வேண்டும்: சரத் பவார்!
வியாழன், 24 ஜனவரி 2008 (11:13 IST)
வேளாண்துறையில் ஆராய்ச்சியையும், வளர்ச்சியையும் மறுசீரமைப்பதுடன், எங்கெல்லாம் இடைவெளிகள் உள்ளதோ அவற்றை நிரப்ப வேண்டும் என்று மத்திய வேளாண் அமைச்சர் சரத்பவார் வேண்டுகோள் விடுத்தார்.
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் 79ஆவது வருடாந்திர பொது கூட்டத்தில் அமைச்சர் கலந்து கொண்டு பேசுகையில் இவ்வாறு கூறினார். மேலும், "இந்தியாவில் வேளாண்மை பல்கலைக்கழகங்களிலும், ஆராய்ச்சி நிறுவனங்களிலும் நடைபெறும் கண்டுபிடிப்புகளின் வேகம் திருப்தியளிப்பதாக இல்லை என்றும் இதனை மாற்றியமைப்பதற்கான முயற்சிகளை இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் மேற்கொள்ள வேண்டுமென்றும்" அமைச்சர் கூறினார்.
வேளாண்மை பாடத்திட்டத்தை இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு மாற்றியமைப்பது அவசியமென்று குறிப்பிட்ட அவர், அண்மையில் மத்திய அரசு துவக்கியுள்ள ராஷ்டிரிய கிருஷி விகாஸ் யோஜனா, தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் பயன்படுத்தக் கூடிய ஆதார வளங்கள், வசதிகள் குறித்தும் விளக்கினார்.
விதை உற்பத்தி, விதை பெருக்கம், நீர்வள ஆதாரங்கள் மேம்பாடு, வேளாண் பள்ளிகள் உருவாக்குதல் போன்ற பல்வேறு விடயங்களில், முதல் திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம், வேளாண் பல்கலைக்கழகங்கள், உழவர் உதவி மையங்கள் ஆகியவை மாநில அளவில் தொழில்நுட்ப உதவியை அளிக்க முடியுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் மத்திய திட்டத்துறை இணையமைச்சர் எம்.வி.ராஜசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.