குழந்தைகள் மீதான வன்முறை புகார் மீது கடும் நடவடிக்கை: தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்!
வியாழன், 24 ஜனவரி 2008 (11:10 IST)
பள்ளிகள், விடுதிகளில் குழந்தைகள் மீது நடத்தப்படும் பலவித வன்முறை புகார்கள் குறித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் எச்சரித்துள்ளது.
பள்ளிகள், விடுதிகளில் குழந்தைகள் மீது நடத்தப்படும் பலவித வன்முறைகள் குறித்துத் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்திடம் ஏராளமான புகார்கள் பதிவாகியுள்ளன. இதையொட்டி சென்னையில் நேற்றுப் பொது விசாரணை நடந்தது.
இதில் ஆணையத்தின் தலைவர் பேராசிரியர் சாந்தா சின்கா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "பள்ளிகள், விடுதிகளில் குழந்தைகள் மீது பலவிதமான வன்முறைகள் நடைபெறுவதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இவற்றின் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது முதன் முறையாக தமிழகத்தில் சென்னையில் இந்த பொது விசாரணை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக புகார்களில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள், காவல் துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணை முடிவில் ஆணையம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்" என்றார்.
நேற்று நடந்த பொது விசாரணையில் 40 வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இதில் பள்ளிகள், விடுதிகளில் குழந்தைகள் மீது நடத்தப்படும் அனைத்து விதமான சித்திரவதை, உடல்ரீதியான தண்டனை, பாலியல் துன்புறுத்தல், ஜாதி பாகுபாடு, நன்கொடைக்காக கட்டாயப்படுத்துவது, மாணவர்களைத் தற்கொலைக்கு தூண்டுவது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் அடங்கும். இந்த விசாரணையில் கல்வித் துறை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்கள் தரப்பு வாதங்களை கூறினர்.
இந்தப் பொது விசாரணையில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் தீபா தீட்சித், மும்பை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எச்.சுரேஷ், கல்வியாளர் டாக்டர் எஸ்.எஸ்.ராஜகோபாலன், தமிழ்நாடு மாநில பெண்கள் ஆணையத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் வி.வசந்தி தேவி, வழக்கறிஞர் அசுதோஷ் தர்மாதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.