11-வது திட்டத்தில் 3 விழுக்காடு அனல் மின் உற்பத்தி அதிகரிக்கும்!
சனி, 19 ஜனவரி 2008 (17:35 IST)
தேசிய அனல்மின் கழகம் 11-வது திட்டக் காலத்தில் தனது மொத்த மின் உற்பத்தி திறனை தற்போது உள்ள 30 விழுக்காட்டில் இருந்து 33 விழுக்காடு அளவுக்கு உயர்த்த உள்ளதாக அதன் தலைவரும், நிர்வாக இயக்குநருமான டி. சங்கரலிங்கம் தெரிவித்துள்ளார். நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மொத்த மின் உற்பத்தியில் 30 விழுக்காடு, அதாவது 28,370 மெகா வாட் மின்சாரம் தேசிய அனல் மின் கழகத்தால் உற்பத்தி செய்யப்படுகிறது. மரபு சாரா எரிசக்தி மூலமாக 1,000 மெகா வாட் மின் உற்பத்தி செய்ய திட்டமிட்டு உள்ளதாகவும், இதில் 600 மெகா வாட் அளவுக்கு மின் உற்பத்தி தமிழகத்தில் மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக இது தொடர்பாக தமிழக மின்வாரிய அதிகாரிகளுடன் அவர் பேச்சு நடத்தியுள்ளார். தமிழக மின்வாரியத்துடன் மேற்கொள்ள உள்ள இத்திட்டத்திற்கான செயல்திட்டம் விரைவில் தயாராகிவிடும் என்று கூறிய அவர் காற்றாலை, சாண எரிவாயு மூலம் இந்த மின் உற்பத்தி தயாரிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ரூ. 7,500 கோடி மதிப்பில் தமிழக மின்வாரியத்துடன் இணைந்து எண்ணுரில் 1,500 மெகாவாட் அனல் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு வருவதாகவும், இப்பணிகள் நிறைவடைந்து வரும் 2010 -2011 நிதியாண்டில் செயல்படத் தொடங்கும் என்றும் டி. சங்கரலிங்கம் தெரிவித்துள்ளார்.