பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு கோரிக்கையை கைவிட்டது பா.ஜ.க.!
வெள்ளி, 18 ஜனவரி 2008 (19:29 IST)
நாடாளுமன்றம், சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான தங்கள் கோரிக்கையை கைவிடுவதாக பா.ஜ.க. அறிவித்துள்ளது!
இதனைச் செயல்படுத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களே இந்த முடிவை எடுக்க காரணம் என்று பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் கட்சிகளே பெண்களுக்கு ஒதுக்கும் முடிவுக்கு வர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பெண்கள் இட ஒதுக்கீட்டிற்கு பா.ஜ.க. குரல் கொடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது. பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத் திருத்தத்தை கொண்டு வருவதில் கடந்த 10 ஆண்டுகளாக ஒத்த கருத்தை எட்ட இயலவில்லை.
இனியும் சும்மா உட்கார்ந்து கொண்டு காலத்தைக் கடத்துவதில் பலன் இல்லை என்பதால், இப்பிரச்சனையில் எங்கள் கட்சியின் நிலையை வெளிப்படுத்துவதைத் தவிர வேறு வழித் தெரியவில்லை என்று கூறியுள்ளார். இப்பிரச்சனையில் அமைச்சரவையில் கூட ஒத்தக்கருத்து ஏற்படவில்லை என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
அரசியல் கட்சிகளே பெண்களுக்கு 33 விழுக்காடு இடங்களை ஒதுக்குவது எளிதானது என்று இந்திய தேர்தல் ஆணையம் முன்வைத்த திட்டம் தான் எளிமையானது, நடைமுறைக்கு சாத்தியமானது என்று சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். இந்த இடஒதுக்கீடு விவாதம், பெண்களுக்கு வழக்கமாக ஒதுக்கப்படும் இடங்கள், புதிய 33 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்குள் வருமா? வராதா? என்ற விவாதத்துடனேயே முடிந்து போய்விட்டதாக அவர் கூறியுள்ளார்.
பெண்களுக்கான இடஒதுக்கீடு சுழற்சி முறையில் பின்னர் வரலாம் என்று பயந்து போன ஒரு சில அரசியல் கட்சிகளும் இதற்குக் காரணம் என்று கூறியுள்ளார். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைப் பெறவுள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் முன் வைத்த திட்டத்தைப் போன்று, அரசியல் கட்சிகளே 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் ஒரு சட்ட முன் வடிவை அரசு நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே கொண்டு வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
அப்போது தான் 2009 ஆம் ஆண்டு நடைப்பெறும் நாடாளுமன்றத் தேர்தல் இடஒதுக்கீட்டு அடிப்படையில் நடைப்பெற வாய்ப்பு உருவாகும். இது போன்ற ஒரு சட்ட முன் வடிவைக் கொண்டு வர தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் சாதகமாக உள்ளதாகவும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் இப்பிரச்சனையில் தங்களின் நிலைப்பாட்டைத் தெளிவுப்படுத்த வேண்டும் என்றும் சுஷ்மா சுவராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.