மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு பிணை மறுப்பு!
வெள்ளி, 18 ஜனவரி 2008 (17:43 IST)
தனது சொந்த மகளைக் பாலியல் பலாத்காரம் செய்ததால் ஆயுள் தண்டனை பெற்ற தந்தை, தனக்குப் பிணைய விடுதலை கேட்டுத் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
ராஜஸ்தானைச் சேர்ந்தவர் ஹனுமான் சிங். இவருக்கு வயதிற்கு வந்த இரண்டு மகள்களும், சாந்தி என்ற மனைவியும் உள்ளனர்.
இந்நிலையில், ஹனுமன் சிங் தனது மூத்த மகளைக் பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக அவரின் மனைவி சாந்தி, கடந்த 2000 ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
விசாரணையின் முடிவில் ஹனுமன் சிங்கின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதனால் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி அஜ்மர் தீர்ப்பளித்தார்.
இதையடுத்துச் சிறையில் அடைக்கப்பட்ட ஹனுமன் சிங், தனது தண்டனையைக் குறைக்க வேண்டும் என்றும், தனக்குப் பிணைய விடுதலை வழங்க வேண்டும் என்றும் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இவ்வழக்கு நீதிபதி அர்ஜித் பசாயத் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இம்மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி, ஹனுமன் சிங் செய்துள்ள மன்னிக்க முடியாத குற்றத்திற்கு குறைவான தண்டனைதான் வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.