மேற்கு வங்கம் : சிங்கூர் நிலக் கையகம் சட்டபூர்வமானது : உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி, 18 ஜனவரி 2008 (14:00 IST)
மேற்குவங்க மாநிலம் சிங்கூரில் டாடா நிறுவனத்தின் சிறிய ரக கார் உற்பத்தித் தொழிற்சாலை அமைப்பதற்குத் தேவையான நிலம் சட்டபூர்வமான முறையில் கையகம் செய்யப்பட்டுள்ளது என்று கொல்கட்டா உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
நிலங்களைக் கையகப்படுத்தும் போது, விவசாயிகளுக்கு உரிய முன்னறிவிப்புகளுடன் இழப்பீடுகளும் வழங்கப்பட்டுள்ளது. அதில் அதிகாரவரம்பு மீறல் எதுவும் இல்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
டாடா நிறுவனத்தின் சிறியரக கார் தொழிற்சாலை மேற்குவங்க மாநிலம் சிங்கூரில் செயல்பட உள்ளது. இத்தொழிற்சாலைக்குத் தேவையான நிலத்தை மாநில அரசே உரிய முறையில் கையகப்படுத்தித் தருவதாக உறுதியளித்து, அதற்கான நடவடிக்கைகளையும் எடுத்தது.
ஆனால், தொழிற்சாலை அமைப்பதற்காக விளை நிலங்களைக் கையகப்படுத்தக் கூடாது என்று பல்வேறு அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், விவசாயிகளைத் திரட்டிப் போராட்டமும் நடத்தின.
இது தொடர்பாக மேற்குவங்க அரசை எதிர்த்து கொல்கட்டா உயர் நீதிமன்றத்தில் 11 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில், மொத்தம் 997.11 ஏக்கர் நிலம் சட்டத்திற்குப் புறம்பாகக் கையகப்படுத்தப்படு உள்ளதாக குற்றம்சாற்றப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்குகளை விசாரித்து வந்த முதன்மை நீதிபதி எஸ்.எஸ்.நிஜ்ஜார், நீதிபதி பி.சி.கோஸ் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.
உலகிலேயே மிகக் குறைந்த விலையுடைய நானோ காரை டாடா நிறுவனம் அறிமுகம் செய்த சில நாட்களுக்குள் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதும், நானோ காரின் உற்பத்தி சிங்கூர் தொழிற்சாலையில்தான் நடக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.