சேது சமுத்திர திட்டம் குறித்து 2 வாரத்தில் பதில் மனு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
புதன், 16 ஜனவரி 2008 (17:41 IST)
''சேது சமுத்திர திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து இன்னும் இரண்டு வாரத்தில் விளக்கமான பதில் அளிக்க வேண்டும்'' என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேது சமுத்திர திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரணைக்கு ஏற்றது. தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் நீதிபதிகள் ரவிச்சந்திரன், பாஞ்சல் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வு விசாரணை மேற்கொண்டது.
சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டால், மன்னார் வளைகுடாவில் உள்ள மதிப்புமிக்க இயற்கை செல்வங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும். அப்பகுதியில் ஆழப்படுத்தும் பணியை மேற்கொள்ளக்கூடாது' என்று நாங்கள் உத்தரவிட்டால் திட்டமே கைவிட வேண்டிய நிலை ஏற்படும் என்று தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். எனவே, இத்திட்டத்தின் தற்போதைய நிலை குறித்தும், திட்டம் நிறைவேற்றப்படும் முறை குறித்தும் மத்திய அரசு இரண்டு வாரத்தில் விளக்கமான பதில் அளிக்க வேண்டும்' என்று நீதிபதிகள் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
அதற்கு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மிலன் கே பானர்ஜி, "சேது சமுத்திர திட்டம் தொடர்பாக அரசு ஒரே ஒரு பதில் மனுவை அளிக்கும். அந்த மனுவை அரசின் சார்பில் எந்த துறை தாக்கல் செய்யும் என்பதை அரசே முடிவு செய்யும். 'இத்துறைதான் பதில் அளிக்க வேண்டும்' என்று மனுதாரர் கட்டளையிடக்கூடாது. ராமர் பாலம் குறித்து இந்திய தொல்பொருள் ஆராயச்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் அறிக்கைகள் தாக்கல் செய்யப்படும்" என்றார்.
சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழகம்- இலங்கைக்கு இடையே மிகக்குறைந்த நேரத்தில் சென்று, வர முடியும். எனவே, வரலாற்று சிறப்பிற்கும், இயற்கை செல்வங்களுக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், இதற்கு முன்பு மத்திய அரசு அளித்த பதில் மனுவில் இந்துக்களால் கடவுளாக போற்றப்படும் ராமர் குறித்து தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பொதுமக்களின் கடும் எதிர்ப்பையடுத்து, அந்த பதில் மனுவை அரசு திரும்ப பெற்றுக்கொணடது குறிப்பிடத்தக்கது.