நாடாளுமன்றத் தேர்தல் குறித்து சொல்ல நான் ஜோதிடர் இல்லை : பிரதமர்!
புதன், 16 ஜனவரி 2008 (16:35 IST)
''தேர்தல் எப்போது என்று கூற நான் ஒன்றும் ஜோதிடர் இல்லை'' என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
சீனப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் வழியில் விமானத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது நாடாளுமன்றத் தேர்தல் 2008 - 09 க்கு இடைப்பட்ட காலத்தில் நடைப்பெறுமா? என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மன்மோகன் சிங், தாம் ஒன்றும் ஜோதிடர் அல்ல என்றும், ஆனால் நாங்கள் எங்களுக்கு உரிய காலத்தை முழுமையாக நிறைவு செய்வோம் என்று தாம் உறுதியாக நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை மாற்றம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பிரதமர், எப்போது அமைச்சரவை மாற்றியமைக்கப்படுமோ அப்போது உங்களுக்குத் தெரியவரும் என்றும், பாரத ரத்னா விருதுக்கு உரியவரைத் தேர்வு செய்ய இன்னும் காலஅவகாசம் இருப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.
தொகுதி சீரமைப்புக் குழு 25 மாநிலங்களில் தனது பணியை நிறைவு செய்து விட்டதாக பிரதமர் தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தைப் பொறுத்த மட்டில் தொகுதி மறுசீரமைபால் பல பழங்குடியினர் தொகுதிகள் குறையும் நிலை உருவாகியுள்ளது. இது அங்கு பதற்றத்தை உருவாக்கியுள்ளது. அம்மாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளும் இது தொடர்பாக புகார் கொடுத்துள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தை உருவாக்கியதே பழங்குடியினர் மேம்பாட்டிற்காகத் தான். நாடாளுமன்றத்திலும், சட்டப் பேரவையிலும் அவர்களின் பிரதிநிதித்துவத்தை குறைப்பதன் மூலம் பின்னடைவைத்தான் பழங்குடியினருக்கு ஏற்படும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
எனவே இப்பிரச்சனைக்குத் தீர்வு கண்டால் தான் ஜார்க்கண்ட் மாநிலம் ஏற்கெனவே உள்ள அடிப்படையில் தேர்தலைச் சந்திக்க இயலும். மீதமுள்ள 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தொகுதி மறுசீரமைப்பு குழு பரிந்துரை அடிப்படையிலேயே அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும். அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து ஆகியவற்றில் பழைய அடிப்படையிலேயே தேர்தல் நடைபெறும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.