இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 ஆவது மாநில மாநாட்டை முன்னிட்டு கொல்கட்டாவில் நடந்த பேரணியில் அவர் பேசுகையில், "சிங்குர் அல்லது சிலிகுரியாக இருக்கட்டும். அரசின் தொழிற்தேவைக்கு எங்கெல்லாம் விவசாயிகள் தங்கள் நிலங்களை வழங்கினார்களோ அவர்களின் நலனில் அரசு அக்கறை கொள்ளும். நிலம் கொடுத்த விவசாயிகளின் வருவாய் மற்றும் வாழ்வாதாரத்தை பாதுகாப்பது அரசின் தார்மிக கடமையாகும்" என்றார்.
இதையடுத்துப் பேசிய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், அமெரிக்காவுடன் இந்தியா ராணுவ ஒப்பந்தம் செய்துகொள்ளக் கூடாது என்று வலியுறுத்தினார்.
"அமெரிக்காவுடன் ராணுவ ஒப்பந்தம் செய்து கொள்வது, நமது அயல்நாட்டுக் கொள்கைக்கு எதிரானது.அவ்வாறு ஒப்பந்தம் செய்து கொண்டால், அமெரிக்காவின் அயலுறவுக் கொள்கையையே இந்தியாவும் பின்பற்ற வேண்டியிருக்கும். அமெரிக்காவுடன் இந்தியா நல்லுறவு வைத்துக் கொள்ளலாம். ஆனால் அமெரிக்காவின் இளைய கூட்டாளியாக மாறிவிடக் கூடாது.
நாடு முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் 2 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். அவர்களது பிரச்சனையைத் தீர்க்க காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தவறிவிட்டது. பொதுவிநியோகத் திட்டத்தை நிறுத்த மத்திய அரசு முயற்சி செய்கிறது.
சில்லறை வணிகத்தில் ஈடுபட பெரிய முதலீட்டாளர்களுக்கு அனுமதி அளித்துள்ளது. வங்கிகள், காப்பீடு, விவசாயம், சில்லறை வணிகம் ஆகியவற்றில் வெளிநாட்டு முதலீட்டாளர்களை அனுமதிப்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்." என்றார் அவர்.
இறுதியாகப் பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜோதிபாசு, சோசலிச அரசு மற்றும் சமத்துவ சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற மார்க்சிஸ்ட் கட்சியின் லட்சியத்தை உடனே அடைவது சாத்தியம் இல்லை என்றார்.
"நான் மேற்கு வங்க முதல்வராக இருந்தபோது மாநிலத்தின் முதல் தொழில் கொள்கையை வெளியிட்டேன். அப்போதே, மக்களின் நன்மைக்காக முதலீடு செய்யும் தொழில்களை மட்டுமே மேற்கு வங்க அரசு அனுமதிக்கும். தொழிலதிபர்களின் லாபம் மட்டுமே நோக்கமாகக் கொண்ட முதலீட்டை அனுமதிக்க முடியாது என்று கூறினேன்.
தற்போது புத்ததேவ் பட்டாச்சார்யா தலைமையிலான ஆட்சியில், மேற்கு வங்கம் விவசாய உற்பத்தியில் நாட்டிலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதையடுத்து தொழில்துறையையும் முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார் ஜோதிபாசு.