அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து டெல்லி செல்லும் வடகிழக்கு எக்ஸ்பிரஸ் இரயிலில் பயங்கர வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
வடகிழக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை கவுகாத்தியில் இருந்து டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. காலை 9.00 மணியளவில் பீகார் மாநிலம் கதிகார் நிலையத்தில் இரயில் நின்றது.
அப்போது ஒரு பெட்டியில் இருக்கைக்கு அடியில் பேப்பரில் சுற்றியபடி ஏதோ மர்ம பொருள் கிடந்தது. அதை பார்த்த பயணி ஒருவர் என்ன இருக்கிறது என்று பேப்பரை விலக்கி பார்த்தார். உள்ளே 2 வெடிகுண்டுகள் இருந்தன.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உடனே ஓடி சென்று இரயில் என்ஜின் டிரைவரிடம் தகவல் சொன்னார். அவர் இரயில்வே காவலர்களுக்குத் தகவல் தெரிவித்தார். காவலர்கள் விரைந்து வந்து, இரயிலில் இருந்த பயணிகள் அனைவரையும் கீழே இறக்கி விட்டனர்.
பின்பு குறிப்பிட்ட பெட்டிக்குள் சென்ற காவலர்கள் வெடிகுண்டுகளை அங்கிருந்து வெளியே எடுத்து வந்தனர். பின்னர் அவற்றை தண்ணீர் நிரப்பப்பட்ட வாளிக்குள் போட்டு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு கொண்டு சென்று செயலிழக்க செய்தனர்.
இதையடுத்து அனைத்து பெட்டிகளிலும் சோதனை நடத்தியதில் வேறு குண்டுகள் எதுவும் சிக்கவில்லை. இதனால் 2 மணி நேர தாமதத்துக்குப் பிறகு இரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.