ரூ.72,000 கோடியில் பெண் குழந்தைகளுக்கு காப்பீட்டுத் திட்டம்: ரேணுகா சவுத்ரி!
வெள்ளி, 11 ஜனவரி 2008 (12:06 IST)
வரவிருக்கும் 11-ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் பெண் குழந்தைகளுக்காக ரூ.72,000 கோடி மதிப்பில் காப்பீட்டுத் திட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரேணுகா சவுத்ரி கூறினார்.
இதுகுறித்துச் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், "இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கும் பெண் சிசுக் கொலையைத் தடுப்பதற்கு சட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளது. ஆனால், மக்களிடம் மனமாற்றம் ஏற்படாதவரை இச்சிக்கலைத் தீர்ப்பது கடினம்.
பெண் சிசுக்கொலை பற்றி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. பெண் சிசுக்கொலையை தடுக்கும் வகையில் பெண் குழந்தைகளுக்கு காப்பீட்டு வழங்கும் திட்டம் 11-ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் செயல்படுத்தப்படும். இதற்கு ரூ.72,000 கோடி ஒதுக்கப்படும்.
மார்ச் 8-ஆம் தேதி பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பெண்களே தலைமையேற்று நடத்தும் நிறுவனங்களுக்கு மார்ச் 8-ஆம் தேதியிலிருந்து 3 மாதத்திற்கோ அல்லது இந்த ஆண்டு முழுவதுமோ வரிச்சலுகைகளை வழங்கலாம்." என்றார்.