இந்தியர்களைப் பணியமர்த்த ஒப்பந்தம் தேவை: மலேசியா!
புதன், 9 ஜனவரி 2008 (18:23 IST)
இந்தியர்களைப் பணியமர்த்துவதில் உள்ள சிக்கல்களைத் தவிர்க்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக வேண்டும் என்று மலேசிய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, மலேசியச் சுற்றுப் பயணம் முடிந்து டெல்லி திரும்பிய மத்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியாவில் உள்ள மலேசியர்கள் மற்றும் மலேசியாவில் பணியாற்றும் இந்தியர்கள் ஆகியோரின் நலன்களுக்காகவும், அவர்களின் பணிச் சூழலை முறைப்படுத்தவும் உருவாக்கப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாவில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து மலேசிய அரசு வருத்தம் தெரிவித்துள்ளது.
மலேசியப் பிரதமர் மற்றும் மலேசிய அயலுறவு அமைச்சர் ஆகியோருடன் இதுகுறித்துப் பேசினேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பின்னர், மலேசியாவில் இந்தியர்களைப் பணியமர்த்த அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது குறித்துப் பேசினீர்களா என்று கேட்டதற்கு, "அப்படி எதுவும் இல்லை" என்றார்.
முன்னதாக, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் பொன்விழா நிகழ்ச்சிகளில் ஏ.கே.அந்தோணி பங்கேற்றார். அப்போது, மலேசியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்புகளை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் பற்றிப் பேசினார்.