உ.பி.யில் வன்முறை: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!
புதன், 9 ஜனவரி 2008 (18:21 IST)
உ.பி. முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் சொந்த ஊரான சஃபாய் கிராமத்தில் இன்று வன்முறையில் ஈடுபட்ட சமாஜ்வாதி கட்சியினர் மீது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டதுடன், பலர் படுகாயமடைந்தனர்.
உத்தரபிரதேசத்தில் கல்லூரி மாணவர் பேரவைத் தேர்தல்களுக்கு அம்மாநில முதல்வர் மாயாவதி தடை விதித்துள்ளார். இதைக் கண்டித்து சமாஜ்வாதிக் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்றிரவு, தலைநகர் லக்னோவில் நடந்த போராட்டத்தின் போது, முலாயம் சிங்கின் சகோதரரும் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவருமான சிவபால சிங்கைக் காவல் துறையினர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதைக் கண்டித்து, கல்லூரி மாணவர்களும் சமாஜ்வாதி கட்சித் தொண்டர்களும் இன்று மீண்டும் மாநிலந் தழுவிய போராட்டத்தில் குதித்தனர். மாயாவதி அரசை உடனடியாகக் கலைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
சஃபாய் கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட சமாஜ்வாதி கட்சித் தொண்டர்களை கலைந்து போகுமாறு காவல் துறையினர் எச்சரித்தனர். அப்போது சிலர் வன்முறையில் இறங்கியதாகத் தெரிகிறது.
இதையடுத்து, காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர். இதில் சமாஜ்வாதி கட்சித் தொண்டர்கள் இருவர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
இச்சம்பவத்திற்கு முலாயம் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அப்பாவித் தொண்டர்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய காவலர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையில் வாரணாசி, அலகாபாத் உள்ளிட்ட மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் வன்முறை பரவியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.