அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கு 24 மணி நேர உதவி மையம்: பிரதமர் துவக்கி வைத்தார்!
செவ்வாய், 8 ஜனவரி 2008 (19:08 IST)
அயல்நாடு வாழ் இந்தியர்கள் தங்களின் எல்லா பிரச்சனைகளுக்கும் ஆலோசனை பெறுவதற்கு உதவும் வகையில், 24 மணி நேர இலவசத் தொலைபேசி உதவி மைய வசதியைப் பிரதமர் மன்மோகன் சிங் துவக்கி வைத்தார்.
மன அழுத்தம் மிகுந்த சூழலில் பணியாற்றும் தொழிலாளர்கள், 1800-11-3090 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டால் தங்கள் பிரச்சனையில் இருந்து விடுபட ஆலோசனைகள் வழங்கப்படும்.
அயல்நாட்டு இளைஞர்களைத் திருமணம் செய்த பெண்கள் ஏதாவது சிக்கலில் சிக்கினால் அவர்களும் இந்த எண்ணைத் தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம்.
இலவசத் தொலைபேசி உதவித் திட்டம், வளைகுடா நாடுகளில் பணியாற்றும் இந்தியர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் என்று அயல்நாடு வாழ் இந்தியர் விவகாரத் துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெரும்பாலான அயல்நாடுகள் தொழிலாளர் நலச் சட்டங்களை முறைப்படி அமல்படுத்துகின்றன. இதனால், முறைகேடாகப் பணியாற்றச் செல்லும் இந்தியர்களே அதிகமான சிக்கல்களில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர் என்றும் அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.
தலைநகர் டெல்லியில் இன்று 6 ஆவது அயல்நாடு வாழ் இந்தியர்களின் மாநாட்டைத் துவக்கி வைத்த பிரதமர், அயல்நாடு வாழ் இந்தியர்கள் விவகாரத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கவுள்ள அயல்நாடு வாழ் இந்தியப் பணியாளர்களுக்கான தகவல் மையத்தையும (Overseas Workers Resource Center (OWRC)) துவக்கி வைத்தார்.
இந்த மையத்தில் இந்திய மொழிகள் அனைத்திலும் தகவல்களைப் பெறமுடியும். வேலை வாய்ப்புத் தகவல்களைத் தருவதோடு, மன அழுத்தம் உள்ளிட்ட பணியிடப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ள பணியாளர்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும இந்த மையம் வழங்கும்.
அயல்நாடு வாழ் இந்தியர்கள் இலவசத் தகவல் மையத்தில், தொழிலாளர்கள் தங்கள் ஊதியச் சிக்கல் தொடர்பான சட்ட உதவிகளைப் பெறுவதற்கான வழி முறைகளும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்துப் பிரதமர் கூறுகையில், "இது ஒரு முன்மாதிரி முயற்சியாக இருக்கும். சட்ட பூர்வமான குடியேற்றங்களை ஊக்குவித்து உதவும் பணியில் இந்த மையம் நீண்ட காலம் இயங்க வேண்டும்" என்றார்.
அயல்நாட்டு வேலை வாய்ப்பு
மேலும் அயல்நாட்டு வேலை வாய்ப்புத் தகவல்களை வழங்குவதற்காக "அயல்நாட்டு வேலை வாய்ப்பு மேம்பாட்டுக் குழு" என்ற புதிய குழுவை அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
அயல்நாடுகளில் பணியாற்ற விரும்பும் இந்தியர்கள், அதற்கான சட்டபூர்வமான வழிமுறைகளையும், வழிகாட்டல்களையும் இக்குழுவிடம் பெற்றுக் கொள்ளலாம்.
இதனால், இடைத் தரகர்களிடம் சிக்கிப் பணத்தை இழக்க வேண்டிய அபாயம் வெகுவாகக் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.