இலங்கையின் 60-வது சுதந்திர தின விழாவில் பங்கேற்க அந்நாடு விடுத்த அழைப்பை ஏற்க பிரதமர் மன்மோகன் சிங் மறுத்துள்ளார். வேறு சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஏற்கெனவே முடிவு செய்துவிட்டதால் இலங்கை அரசின் அழைப்பை ஏற்க இயலாது என இந்தியா அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளதாக இலங்கை அரசு இன்று கூறியுள்ளது.
இலங்கையின் 60வது சுதந்திர தின விழா வரும் பிப்ரவரி 4ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருமாறு இலங்கை அரசு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அழைப்பு விடுத்திருந்தது. இதனிடையே இலங்கை சுதந்திர தின விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க கூடாது என்று பல்வேறு தமிழக கட்சிகள் மற்றும் அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.
இந்த நிலையில் பிப்ரவரி 4ஆம் தேதி ஏற்கனவே திட்டமிடப்பட்ட பணிகள் காரணமாக பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைக்கு வர இயலவில்லை என்று இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை உயரதிகாரி ரவிநாத அரியசின்ஹா கூறியுள்ளார்.
எனினும் இருதரப்பு உறவுகள் தொடர்பாக ஆலோசிக்க 2008ம் ஆண்டில் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை வருவார் என்றும் அதற்கான தேதிகள் குறித்து இந்தியாவுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.