புதுடெல்லியில் குடிசைப் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
டெல்லியில் லகோரி கேட் பகுதியில் ஏராளமான மக்கள் குடிசைகளில் வசித்து வருகின்றனர். இன்று அதிகாலை அங்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 250 குடிசைகள் எரிந்து சாம்பலாயின. அதிகாலை என்பதால் மக்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது சிலர் தீயை பார்த்து அலறியடித்து ஓடினர்.
எனினும் 6 பேர் தீயில் சிக்கி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் 25 வாகனங்களுடன் வந்து போராடி தீயை அணைத்தனர்.
இந்த குடிசைப் பகுதியை காலி செய்வதற்கு சில உள்ளூர் அரசியல்வாதிகள் முயற்சி செய்ததாகவும், இதனால் காவல்துறையினருக்கும், அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் வேண்டுமென்றே சிலர் இந்த குடிசைப் பகுதிக்கு தீ வைத்திருக்கலாம் என்று குடிசைவாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
எனினும் விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த விபத்து குறித்து டெல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.