உல்ஃபா தீவிரவாதிகள் மிரட்டல்: விமான நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
Webdunia
புதன், 2 ஜனவரி 2008 (17:57 IST)
சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்கள் இயக்கத்தினரை விடுவிக்கக் கோரி விமானங்களைக் கடத்துவதற்கு உல்ஃபா தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்து, வடகிழக்கு மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களில் மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையினருடன், துணை ராணுவத்தினர் மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மோப்ப நாய்கள், வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும் வல்லுநர்கள், அதி விரைவுப் படையினர் என எல்லாப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக சிம்லா விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, அரசுடன் நடந்துவரும் அமைதிப் பேச்சுகள் தொடர வேண்டுமானால் ஜனவரி 5 ஆம் தேதிக்குள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள உல்ஃபா தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்று உல்ஃபா பிரதிநிதி மாமோனி ரைசம் கோஸ்வாமி கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.