சேது சமுத்திரத் திட்டத்தைக் கைவிடக்கோரி ஹிந்து அமைப்புகள் போராட்டம்!
Webdunia
ஞாயிறு, 30 டிசம்பர் 2007 (15:37 IST)
ஹிந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து ராமர் பாலத்தைப் பாதுகாக்கும் வகையில் சேது சமுத்திரத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி வி.ஹெச்.பி. உள்ளிட்ட ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் தலைநகர் புது டெல்லியில் இன்று பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் கே.எஸ்.சுதர்சனம், சேது சமுத்திரத் திட்டப் பணிகளைத் தொடரக் கூடாது என்று மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
"இந்தியாவின் பண்பாட்டு முக்கியத்துவத்தை ராமர் பாலம் வெளிப்படுத்துகிறது. எனவே அதை அழிக்கும் சேது சமுத்திரத் திட்டத்தை தொடர அனுமதிக்க மாட்டோம்" என்றார் அவர்.
சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறினால் தமிழகம் மற்றும் கேரளக் கடற்கரைகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய சமூகப் பொருளாதார பாதிப்பு உண்டாகும் என்றும் சுதர்சனம் கூறினார்.
ஹிந்துக்கள் மட்டுமல்லாமல் கிறித்தவர்கள், முஸ்லிம்கள் ஆகியோரும் இத்திட்டத்தை எதிர்க்கின்றனர் என்று குறிப்பிட்ட சுதர்சனம், இவ்விடயத்தில் தி.மு.க.வின் நிர்ப்பந்தத்திற்கு மத்திய அரசு அடிபணிந்துவிடக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.
முன்னதாக நடந்த பேரணியில், தமிழகம், கர்நாடகம், குஜராத், பீகார், மத்தியப் பிரதேசம், உத்தரபிரதேசம் உள்படப் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சங் பரிவார் அமைப்புகளைச் சேர்ந்த 50,000 க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான், சத்தீஷ்கர் முதல்வர் ராமன் சிங், பா.ஜ.க. பொதுச் செயலர் அருண் ஜெட்லி, வி.ஹெச்.பி. தலைவர் பிரவீன் தொகாடியா உள்படப் பலர் தலைமை வகித்தனர்.
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், இந்தப் போராட்டத்திற்கு வாழ்த்துத் தெரிவித்துக் கடிதம் எழுதியுள்ளார்.