இமாச்சலத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை!
Webdunia
வியாழன், 27 டிசம்பர் 2007 (19:02 IST)
மொத்தம் 68 தொகுதிகளைக் கொண்டுள்ள இமாச்சலப் பிரதேசச் சட்டப் பேரவைக்கு இரண்டு கட்டமாக நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. இதன் முடிவுகள் 1 மணி நேரத்தில் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருந்தாலும் தேர்தல் முடிவுகள் மதியம் 2 மணிக்குத்தான் முறைப்படி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இமாச்சலத்தில் முதல் கட்டமாக கடந்த மாதம் 14 ஆம் தேதி கிண்ணாவூர், லாஹால் ஸ்பிட்டி, பர்மார் ஆகிய 3 பழங்குடியினர் தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடந்தது. பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த 14 ஆம் தேதி 65 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடந்தது.
மொத்தம் 12 மாவட்டங்களில் வசிக்கும் 4.4 பில்லியன் வாக்காளர்கள் பங்கேற்ற இந்தத் தேர்தலில் சராசரியாக 71 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்தேர்தலில் பா.ஜ.க. 68 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. காங்கிரஸ் எல்லா தொகுதியிலும் வேட்புமனு தாக்கல் செய்தாலும், கங்காத் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதால், 67 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது.
இதேபோல லோக் ஜனசக்தி, சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் தலா 40, 12 ஆகிய தொகுதிகளில் களத்தில் உள்ளனர். சுயேட்சைகள் 58 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 67 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
தேர்தலை முன்னிட்டு 3 வாரங்கள் நடந்த பரபரப்பான பிரச்சாரத்தில் காங்கிரசும், பா.ஜ.க.வும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் தலைவர்களை மேடையில் இறக்கின.
பிலாஸ்பூர், பாலம்பூர் பகுதிகளில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கும், சிம்லா, ஜவாலி பகுதிகளில் நடந்த கூட்டங்களில் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் எல்.கே.அத்வானியும் பரபரப்பு உரையாற்றினர்.
அரசியல் கட்சிகளின் பிரச்சாரத்தில், காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல் காந்தி நடத்திய 100 கி.மீ. ஊர்வலம் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.