இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாள் 'கிறிஸ்துமஸ்' பண்டிகையாக உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நாட்டின் பல்வேறு தலைவர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
"கிறிஸ்துமஸ் பண்டிகை அனைத்து தரப்பினரிடமும் சகோதரத்துவம், அன்பு, அமைதி, நல்லிணக்கம் போன்ற உயரிய பண்புகளை வளர்க்க வேண்டும் என்று விழைகிறேன். கிறிஸ்துவ பெருமக்களுக்கு எனது உளம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக முதல்வர்
முதல்வர் கருணாநிதி விடுத்துள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில், தமிழக அரசு இந்த ஆண்டு கிறிஸ்தவர் களுக்கு 3.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கி இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
"எதிரிகளிடத்திலும் அன்பு காட்டுவோம் என்று இயேசுபெருமான் உரைத்த நெறிபோற்றி அன்பர்கள், நண்பர்கள் மீது மட்டுமல்லாமல், காழ்ப்புணர்வும், அகங்காரமும் கொண்டு நம்மை காய்பவர்கள் மீதும் அன்பை பொழிவோம். சமுதாயத்தில் எல்லோரும் ஏற்றம் பெற இடையறாது உழைப்போம்; வளம் காண்போம் என இந்த இனிய கிறிஸ்துமஸ் திருநாளில் சூளுரைத்து செயல்படுவோம்" என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜெயலலிதா
அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "இயேசுபிரானின் போதனைகளுக்கு எதிரான போக்கு நிலவிக் கொண்டிருக்கிற இன்றைய சூழ்நிலை மாறி, மதநல்லிணக்கம், மனிதநேயம், சமூக ஒற்றுமை, இந்திய ஒருமைப்பாடு ஆகியவை தழைத் தோங்கி அனைவரது வாழ்விலும் இருள் நீங்கி ஒளி வீசட்டும்" என்று கூறியுள்ளார்.
எம்.கிருஷ்ணசாமி
தமிழக காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில், "ஏற்றத் தாழ்வற்ற சமுதாயம் அமையவும், நலிந்துபோன மக்களின் துன்பம், துயரம் நீங்கவும் இயேசுபிரான் ஆற்றிய மலை பிரசங்கங்கள் மனித வாழ்க்கைக்கு ஒளிவிளக்காகும். அவர் உலகுக்கு அறிவித்த அறநெறிகளை நினைவில் கொண்டு சாதி, இன, மத பாகுபாடு களை மறந்து நம்மிடையே நல்லிணக்கம் மேம்படவும், தீவிரவாதம் மறைந்து அமைதி, சமாதானம், மனித நேயம் உயர்ந்து விளங்கிடவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைப் போம் என்று இந்நன்னாளில் சூளுரை ஏற்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
வைகோ
ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "இயேசுகிறிஸ்து போதித்த மனித நேய நெறிகளை போற்றி பின்பற்றவும், சாதி சமய வேற்றுமை களை கடந்து சகோதரத்துவம் தமிழகத்தில் மேலோங்கவும் கிறிஸ்துமஸ் பண்டிகை திருநாளில் உறுதிகொள்வோம்" என்று கூறியுள்ளார்.
ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "இழந்துபோனதை தேடவும், நலிந்தவர்களை ரட்சிக்கவும் வந்தேன் என்று இயேசுநாதர் சொன்னார் என விவிலியம் கூறுகின்றது. நம்மைச் சுற்றியுள்ள சமுதாயத்தில் நலிந்தவர்கள் யார்? கைவிடப்பட்டவர்கள் யார்? அன்பு செலுத்தப்படவேண்டியவர்கள் யார்? அரவணைத்து செயல்பட வேண்டியவர்கள் யார்? என்று அடையாளம் கண்டு அனைவரையும் சகோதரர்களாக ஏற்று செயல்படுவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மனித நேயத்தின் மூலமாக வறுமையில்லாத, வன்முறையற்ற, ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயத்தை உருவாக்க பாடுபடுவோம் என்ற உறுதிமொழியினை ஏற்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.
சரத்குமார்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "போட்டி, பொறாமை, வஞ்சகம், சூது, வன்முறை, பயங்கரவாதம் என்னும் தீமைகளால் சூழப்பட்டுள்ள உலகிற்கு இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் இயேசுவின் போதனைகள் பொருத்தமான வாழ்க்கை நெறிகளாக அமைந்துள்ளன. மனித குலத்தின் மேன்மையை நிலை நிறுத்த இயேசுநாதருடைய அன்பு வழியை எந்நாளும் பின்பற்றுவோம் என்று உறுதி ஏற்போம்" என குறிப்பிட்டுள்ளார்.