திங்கள், 24 டிசம்பர் 2007 (17:17 IST)
குஜராத் மாநில முதல்வராக நரேந்திர மோடி நாளை மூன்றாவது முறையாக பதவியேற்கிறார்.
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்த நாளான நாளை மதியம் 12.50 மணிக்கு காந்தி நகரில் உள்ள சர்தார் பட்டேல் அரங்கில் நடைபெறும் வண்ணமிகு விழாவில் அம்மாநில ஆளுநர் நவல் கிஷோர் சர்மா, நரேந்திர மோடிக்கு பதவி பிரமாணமும், இரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைக்கின்றார்.
குஜராத் சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று காந்தி நகரில் டவுன்ஹாலில் நடைபெற்றது.
மோடி உள்ளிட்ட 117 பா.ஜ.க.சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பா.ஜ.க. சட்டமன்ற கட்சித் தலைவராக நரேந்திர மோடி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முன்னதாக வரும் 27 -ஆம் தேதி நரேந்திர மோடி, குஜராத் மாநில முதல்வராக 3 -வது முறையாக பதவியேற்பார் என்று கூறப்பட்டது.
ஆனால் இன்று நடைப்பெற்ற கூட்டத்தில் நாளை பதவியேற்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
குஜராத் முதல்வர் பதவிக்கு ஏற்கெனவே நரேந்திர மோடியின் பெயரை பா.ஜ.க. நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2002 ஆம் ஆண்டை விட இந்த தேர்தலில் பா.ஜ.க. 10 இடங்கள் குறைவாக பெற்றிருந்தாலும் 117 இடங்களைப் பெற்று அரிதிப் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.
தற்போதைய தேர்தல் வெற்றி மூலம் 3-வது முறையாக மோடி குஜராத் முதல்வராக வரும் 27 ஆம் தேதி பொறுப்பேற்கிறார்.
இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி 59 இடங்களைப் பெற்றுள்ளது.