வீட்டுக் காவலில் தஸ்லீமா நஸ்ரீன்? மத்திய அரசு மறுப்பு!
சனி, 22 டிசம்பர் 2007 (16:11 IST)
வங்கதேச எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரீனை வீட்டுக் காவலில் வைத்திருப்பதாக வெளியான செய்திகளை மத்திய அரசு மறுத்துள்ளது.
தற்பொழுது மத்திய அரசின் பாதுகாப்பில் டெல்லியில் வசித்து வரும் தஸ்லீமா நஸ்ரீன், தன்னை கொல்கட்டா செல்ல அனுமதி அளிக்குமாறு மத்திய அரசிடம் கேட்டிருந்தார். ஆனால் அதற்கான அனுமதியை மத்திய அரசு அளிக்கவில்லை.
இந்த நிலையில் அவர் டெல்லியை விட்டு வெளியேறாதிருக்க வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக செய்தி பரவியது. ஆனால் அப்படிப்பட்ட செய்திகள் உண்மையல்ல என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி மறுத்துள்ளார்.
இதற்கிடையே தஸ்லீமா நஸ்ரீன் எங்குச் செல்லப் பிரியப்படுகிறாரோ அதற்கு மத்திய அரசு அனுமதி தந்து அவருக்கு உரிய பாதுகாப்பும் அளிக்க வேண்டும் என்று கூறி அமைதி பேரணி ஒன்றை நடத்த கலைஞர்களும், மனித உரிமை ஆர்வளர்களும் முடிவு செய்துள்ளனர்.
இன்று மாலை நடைபெற உள்ள அந்த பேரணியில் நடிகரும், இயக்குநருமான அபர்ணா சிங், ஓவியர் சுவபிரசன்னா, நாடக நடிகர் பிபாஷ் சக்ரவர்த்தி, மித்ரா, பொருளாதார நிபுணர் அம்லான் கன்டா ஆகியோர் பங்கேற்பார்கள் என்று ரூபி முகர்ஜி கூறியுள்ளார்.
இந்த பேரணிக்கு எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என்றும், தஸ்லிமா நஸ்ரீன் முழு சுதந்திரத்துடன் உலா வர வேண்டும் என்பதே தங்களுடைய நோக்கம் என்றும் ரூபி முகர்ஜி கூறியுள்ளார்.