நிதி ஒதுக்கீடு சாதி, மத அடிப்படையிலானது அல்ல : பிரதமர்!

புதன், 19 டிசம்பர் 2007 (20:04 IST)
நமது நாட்டின் வளர்ச்சியில் இடமளிக்கப்படாமல் ஒதுக்கப்பட்டுள்ள சமூகங்களின் மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்வது மக்களை பிளவுபடுத்துவது ஆகாது என்று பாரதிய ஜனதா கட்சியின் குற்றச்சாற்றிற்கு பிரதமர் மன்மோகன் சிங் பதிலளித்துள்ளார்!

முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மையினர் மேம்பாட்டிற்கு 11வது ஐந்தாண்டுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்வது சமூகத்தை பிளவுபடுத்துவது என்றும், வாக்கு வங்கி அரசியல் என்றும் பாரதிய ஜனதா கட்சி முதல்வர்கள் குற்றம் சாற்றினர்.

இது, மத ரீதியான நிதி ஒதுக்கீடு என்று குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடி கூறினார். இதே கருத்தை மத்தியப் பிரதேச பாஜக முதலமைச்சர சிவராஜ் சிங் சவானும் எதிரொலித்தார்.

இதற்கு பதிலளித்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அவர்களையும் முழுமையாக பங்கேற்கச் செய்வதற்கு அம்மக்களின் மேம்பாட்டிற்காக முதலீடு செய்வது அவசியமானது என்றும், அப்படிச் செய்வது சாதி ரீதியாகவோ, மத ரீதியாகவோ மக்களை பிளவுபடுத்துவது ஆகாது என்று கூறினார்.

நமது நாட்டின் முன்னேற்ற குறியீட்டை பார்த்தோமானால் சில சமூகங்கள் மிக மோசமான நிலையில் இருப்பது யதார்த்தம் என்றும், அவ்வாறு ஓரங்கட்டப்பட்ட சமூகங்களை அடையாளம் கண்டு மேம்படுத்த முதலீடு செய்வது ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அவசியமானது என்று கூறியுள்ள மன்மோகன் சிங், செழுமையான, சமத்துவமான இந்தியாவை உருவாக்க இச்சமூகத்தில் உள்ள எந்தவொரு சிறு குழுக்களையும் நாம் விட்டுவிட்டுச் செல்ல முடியாது என்பதனை உணரவேண்டும் என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்