1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!

செவ்வாய், 18 டிசம்பர் 2007 (12:35 IST)
கடந்த 1984 ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் குறித்து மீண்டும் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய புலனாய்வுக் கழகத்திற்கு (சி.பி.ஐ.) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்று டெ‌ல்‌லி‌யி‌லஉ‌ள்கார்கர்டூமா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான ஜகதீஷ் டைட்லருக்கு உள்ள தொடர்பு குறித்து மீண்டும் விசாரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் முக்கியச் சாட்சியாகக் கருதப்படும் ஜஸ்பிர் சிங்கின் வாக்குமூலத்தை பதிவு செய்த பிறகு, ஜனவரி 15 ஆம் தேதி வழக்கின் முன்னேற்றம் பற்றிய அறிக்கையை ம.பு.க. தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது.

விசாரணையின் போது, தற்போது கலிஃபோர்னியாவில் வசிக்கும் ஜஸ்பிர் சிங், ஜனவரி 14 ஆம் தேதி தனது சாட்சியத்தை பதிவு செய்யத் தயாராக உள்ளார் என்று அவரின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

முன்னதாக, இந்நிகழ்வு நடந்து 23 ஆண்டுகள் ஆவதால் சாட்சிகளைக் கண்டறிவது கடினம் என்று ம.பு.க.வும், ம.பு.க. தன்னை விசாரிக்கவே இல்லை என்று முக்கியச் சாட்சியான ஜஸ்பிர் சிங்கும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சாட்சிகள் இல்லை என்று ம.பு.க. கூறியதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், வழக்கை முடிவுக்குக் கொண்டுவந்து உத்தரவிட்ட நிலையில், முக்கிய சாட்சியான ஜஸ்பீர் சிங் கலிஃபோர்னியாவில் இருப்பதை தனியார் தொலைக்காட்சி ஒன்று கண்டுபிடித்து கூறியதை அடுத்து, இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.


வெப்துனியாவைப் படிக்கவும்